சாமுண்டி மலையில் ஆட்டோவுக்கு தடை கூடுதல் அரசு பஸ்கள் இயக்க உத்தரவு
சாமுண்டி மலையில் ஆட்டோவுக்கு தடை கூடுதல் அரசு பஸ்கள் இயக்க உத்தரவு
ADDED : டிச 31, 2024 05:41 AM

மைசூரு: ஆங்கில புத்தாண்டை ஒட்டி, சாமுண்டி மலையில் ஆட்டோக்கள் இயக்க தடை செய்யப்பட்டதுடன், கூடுதல் பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகத்துக்கு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு தொடர்பாக, மைசூரு சாமுண்டி மலையில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று உயர் அதிகாரிகளுடன், கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
புத்தாண்டை ஒட்டி, சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்காகவும், போக்குவரத்தை சரி செய்யவும் கூடுதல் போலீசாரை நியமிப்பது அவசியம்.
சாமுண்டி மலைக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். புத்தாண்டு அன்று, மலைப்பகுதிக்கு ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம்.
இதற்காக, கூடுதல் பஸ்களை, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் இயக்க வேண்டும். நகரின் பல்வேறு லே - அவுட்கள், நகர ரயில் நிலையத்தில் இருந்தும் பஸ்களை இயக்கலாம்.
சாமுண்டி மலைக்கு செல்லும் தவரேகட்டே நுழைவு வாயில், ஜன., 1ம் தேதி காலை 6:30 மணி முதல் திறந்திருக்கும். மலையில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள், வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து வரிசையில் வர வேண்டும்.
பக்தர்கள் அதிகளவில் கூடுவதால், மலையில் குப்பை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, கூடுதலாக பத்து துப்புரவு தொழிலாளர்கள், குப்பை அள்ளும், 'காம்பாக்ட்' வாகனத்தை நாள் முழுதும் பயன்படுத்த வேண்டும். சாமுண்டி மலையில், படிக்கட்டுகள் அருகில் தற்காலிக மொபைல் கழிப்பறை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்னதான கூடத்தில், பக்தர்களுக்கு இலவசமாக உணவு, குடிநீர் வழங்குவோருக்கு வசதியாக, டேங்கர் குடிநீர் வாகனத்தை, நாள் முழுதும் நிறுத்த வேண்டும். கோவிலில் ஏற்கனவே அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது.
கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள், திறமையான டாக்டர்கள், ஓட்டுனர்கள், தேவையான மருத்துவ ஊழியர்களை அமர்த்த சுகாதார துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தின் தரத்தை, காலையிலேயே அதிகாரிகள் பரிசோதித்து, சான்றிதழ் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.