பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிருங்கள்! நீதிபதி கணபதி குருசித்த பாதாமி அறிவுரை
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிருங்கள்! நீதிபதி கணபதி குருசித்த பாதாமி அறிவுரை
ADDED : ஜன 31, 2024 12:09 AM

தங்கவயல் : ''பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும். இது சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது. கால்நடைகள் உயிருக்கு கேடு விளைவிக்கிறது,'' என, தங்கவயல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கணபதி குருசித்த பாதாமி அறிவுறுத்தினார்.
தேசிய துாய்மை தினம் நேற்று ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்க பூங்காவில் கடைபிடிக்கப்பட்டது. துாய்மைப்படுத்தும் பணியை துவக்கிவைத்து நீதிபதி கணபதி குருசித்த பாதாமி பேசியதாவது:
மனிதர்களால் உருவாக்கப்படுவது தான் பிளாஸ்டிக். நகரின் சுற்றுப்புறத்தை சீரழிக்கிறது. நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பூங்காவில் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளன.
குடித்துவிட்டு பீர்பாட்டிலை உடைத்து ஆங்காங்கே வீசியுள்ளனர். இங்கு விளையாடும் சிறுவர்கள், குழந்தைகளை பாதிக்காதா? இது போன்று செய்வோருக்கு, கொஞ்சமாவது பொது அறிவு வேண்டும்.
குப்பை அகற்ற என்.சி.சி., மாணவர்கள் பலர் ஆர்வமுடன் வந்துள்ளனர். நான் மாணவனாக இருந்தபோது, என்.எஸ்.எஸ்., பிரிவில் இருந்தேன்.
சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றேன். இன்னமும் வைத்து உள்ளேன்.
மாணவர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக அறிவுறுத்த வேண்டும். ஏதோ ஒரு நாள் இணைந்து, பூங்காவில் சுத்தம் செய்தால் போதாது. வாரத்தில் ஒரு நாளாவது, ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
இண்டி தாலுகாவில், கிருஷ்ணா நதி நீர் பாயும் இடத்திலும் பிளாஸ்டிக் , கழிவுநீர் சேருவதால் சுத்தமான நீர் பாதிக்கிறது. ஏரி நீரை அசுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.
நாம் சுவாசிக்கும் காற்று மாசு ஏற்படக்கூடாது. சுகாதாரம் மனித வாழ்வுக்கு மிக முக்கியம்.
பிளாஸ்டிக்குகளை தவிர்க்க வேண்டும். இது சுற்றுப்புற சூழலை பாதிக்கிறது. கால்நடைகள் உயிருக்கு கேடு விளைவிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூங்காவில் தங்கவயல் நீதிமன்ற நீதிபதிகள், துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் மஞ்சுநாத், முஜாபர் மஞ்சரி, வினோத் குமார், மஞ்சு மற்றும் வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால கவுடா, துணைத் தலைவர் மணிவண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.