'நம்ம கிளினிக்' குறித்து விழிப்புணர்வு பெங்களூரு மாநகராட்சி திட்டம்
'நம்ம கிளினிக்' குறித்து விழிப்புணர்வு பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஜன 22, 2025 11:36 PM

பெங்களூரு : 'நம்ம கிளினிக்'கில் சிகிச்சை பெற தயக்கம் காட்டுவதால், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கில், பெங்களூரில் ஒவ்வொரு வார்டிலும் ஒன்று வீதம் மொத்தம் 225 'நம்ம கிளினிக்'குகள் திறக்கப்பட்டன.
அந்தந்த வார்டுகளில் உள்ள பூங்காக்கள், பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களுக்கு மாநகராட்சி ஊழியர்களுடன், கிளினிக் மருத்துவர்கள் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆனால், இந்த கிளினிக்கில் ஆரம்பத்தில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது. சில இடங்களில் டாக்டருக்கு பதிலாக, செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். இதனால் இங்கு சென்று சிகிச்சை பெற மக்கள் தயங்கினர். இதனால் மக்களிடம் நம்ம கிளினிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கூறியதாவது:
தற்போது 30 - 40 பேர் நம்ம கிளினிக்கிற்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நம்ம கிளினிக்குகள் துவங்கியபோது, டாக்டர்கள், உபகரணங்கள் பற்றாக்குறை இருந்தது. இந்த பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை.
இந்த கிளினிக்கிற்கு டாக்டர்கள் தான் முக்கியம். இப்போது மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பள்ளி, கல்லுாரிகளில் வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன. நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை தடுக்கவும் குறும்படங்கள் திரையிடப்படும்.
அந்தந்த வார்டுகளில் உள்ள பொது இடங்களுக்கு சென்று, பல்வேறு நோய்கள், சிகிச்சைகள் குறித்து மக்களிடம் எடுத்து கூறப்படும்.
தெரு நாடகங்கள், வாகனங்கள் மூலம் நம்ம கிளினிக் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நம்ம கிளினிக் மருத்துவ சேவை குறித்து, மக்கள் அறியும் வரை இந்த விழிப்புணர்வு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

