புகை பிடிப்பதால் வரும் பாதிப்புகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு
புகை பிடிப்பதால் வரும் பாதிப்புகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு
ADDED : பிப் 12, 2025 07:05 AM

பெங்களூரு :   பொது இடங்களில் புகை பிடிப்பதால் வரும் பாதிப்புகள் குறித்து ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஒரு புதிய முன்னெடுப்பை பெங்களூரு மாநகராட்சி துவங்கி உள்ளது.
பெங்களூரில் பொது இடங்களில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதற்கு தீர்வு காணும் வகையில், பெங்களூரு மாநகராட்சி, புளூம்பெர்க் தொண்டு நிறுவனம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து புகையிலை விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளன.
பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை; ஹூக்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை; இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யப்பட உள்ளது. இதற்காக, 16 ஆட்டோக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு மாநகராட்சி வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு ஆணையர் சுரல்கர் விகாஸ் கிஷோர், ஆரோக்கிய நகரங்களின் கூட்டமைப்பு மற்றும் புகையில்லா பெங்களூரு நகர திட்ட இயக்குனர் திரிவேணி, தலைமை சுகாதார அதிகாரி சையத் சிராஜூதீன் மதினி, புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி குமார், மண்டல சுகாதார அதிகாரி, மருத்துவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
புகை பிடிப்பதால் வரும் பிரச்னைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன், ஆட்டோக்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வாரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
சிறப்பு ஆணையர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், ''பெற்றோர், தங்கள் குழந்தைகள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு செல்லாமல் பாதுகாக்க வேண்டும். மாநகராட்சியின் முயற்சியால் விழிப்புணர்வு நிச்சயம் ஏற்படும். ஹூக்கா, எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை தடை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

