ADDED : டிச 13, 2024 05:12 AM

பெலகாவி: ''கர்நாடகாவில் பேஸ்புக், வாட்ஸாப் உட்பட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக, மோசடி நடப்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடக மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது:
மாநிலத்தில் நடப்பாண்டு டிஜிட்டல் மோசடி குறித்து 641 வழக்குகளில் ரூ.109 கோடிக்கு மோசடி நடந்துள்ளது. இதில் 9.45 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்களை ஏமாற்ற போலி சிம்கார்டு, போலி வங்கி கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
பேஸ்புக், வாட்ஸாப், டெலிகிராம் உட்பட மற்ற வலைதளங்கள் வழியாக மோசடி செய்யும் குரூப்கள் அடையாளம் கண்டு, முடக்கப்படுகின்றன. 268 பேஸ்புக் குரூப்கள், 465 டெலிகிராம் குரூப்கள், 15 இன்ஸ்டாகிராம், 61 வாட்ஸாப் குரூப்கள் செயலிழக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரிகள், நிறுவனங்களுக்கு சென்று, மாணவர்கள், பொதுமக்களுக்கு
டிஜிட்டல் மோசடி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் மூலம் மக்களை ஏமாற்றுவோர் மீது, வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுதும் டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்தாண்டு நாடு முழுதும், 42,000 வழக்குகள் பதிவாகின. கர்நாடகாவில் 11,000 வழக்குகள் பதிவாகின. டிஜிட்டல் மோசடியில் சிக்கியவர்கள், உடனடியாக இலவச சஹாய வாணி எண் 1930ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.