sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

/

அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

அயோத்தி வழக்கில் அபாண்டம்; கொந்தளித்த தலைமை நீதிபதி!

15


UPDATED : பிப் 09, 2026 01:27 PM

ADDED : ஜன 29, 2026 06:57 AM

Google News

15

UPDATED : பிப் 09, 2026 01:27 PM ADDED : ஜன 29, 2026 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

ஆகஸ்ட் 2017லிருந்து ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் தீபக் மிஸ்ரா. ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர். பரபரப்பான வழக்குகளை விசாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர். ஓரின சேர்க்கை தப்பில்லை, சபரிமலை கோவிலில் வயதுக்கு வந்த பெண்கள் செல்லலாம் என பல தீர்ப்புகளை வழங்கியவர் இந்த மிஸ்ரா. பிரபலமான நிர்பயா பாலியல் பலாத்கார கொலை வழக்கில் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த அமர்வில் நம்ம ஊர் நீதிபதி பானுமதியும் இருந்தார். இவருடைய இன்னொரு தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

திருமணமான ஆணோ, பெண்ணோ வேறொருவருடன் உடல் உறவு கொண்டால் அதாவது இருவருடைய சம்மதத்துடன் இது நடந்தால் அது குற்றம் ஆகாது என தீர்ப்பளித்தார் மிஸ்ரா. இந்த தீர்ப்பிற்கு முன் வரை இந்த விஷயம் ஒரு குற்றம் என இந்தியன் பீனல் கோடில் இருந்தது. அதை நீக்கியவர் நீதிபதி மிஸ்ரா. 1993ல் மும்பை குண்டுவெடிப்பில் குற்றவாளியான யாகூப் மேமனிற்கு தூக்கு தண்டனையை உறுதி செய்ததும் நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுதான். ஆனால் அது ஒரு நடு இரவு விசாரணை. இதைப் பற்றி தனியே எழுதுகிறேன்.

இவருடைய பதவிக்காலத்தில் பல பிரச்னைகளை சந்தித்தார். இதுவரை எந்த ஒரு நீதிபதியும் சந்திக்காத பல இன்னல்கள். இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக உச்ச மன்ற ஐந்து சீனியர் நீதிபதிகள் மிஸ்ராவிற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, 'மிஸ்ரா தன்னிச்சையாக செயல்படுகிறார்' என பேசினார்கள். 'எங்களுக்கு முக்கிய வழக்குகளை கொடுப்பதில்லை. மிகவும் சென்சிடிவ் வழக்குகளை ஜூனியர் நீதிபதிகளுக்கு கொடுத்துவிடுகிறார் மிஸ்ரா' என பல குற்றச்சாட்டுகளை இந்த 5 நீதிபதிகளும் சொன்னார்கள்.

இது பெரும் பிரச்னையைக் கிளப்பியதோடு உச்ச நீதிமன்றத்தில் கோஷ்கள் ஏற்பட காரணமாயிற்று. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிபதி மிஸ்ரா மீது குற்றம் சாட்டிய 5 பேரில் ஒருவரான நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியான பிறகு அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அது பொய் என நீதிபதிகள் குழுவால் விசாரணைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது.

அயோத்தி வழக்கும், பார்லிமென்ட் தேர்தலும்


டிசம்பர் 2017ல் அயோத்தி கோவில் நிலப்பிரச்னை தொடர்பான வழக்கு முதலில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில்தான் விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதி மிஸ்ராவைத் தவிர, நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எஸ். அப்துல் நசீர் ஆகியோர் இருந்தனர். விசாரணை ஆரம்பித்த உடனேயே பிரச்னையைக் கிளப்பினார் கபில் சிபல். காங்கிரஸ்காரரான இவர் ஒரு முஸ்லிம் மனுதாரருக்கு ஆஜராகி வாதாடினார். 'இந்த வழக்கை 2019 பார்லிமென்ட் தேர்தலுக்கு பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்' என ஒரு குண்டைத் தூக்கி போட்டார் கபில் சிபல். நீதிபதிகள், மற்ற வக்கீல்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கபில் சிபல் தொடர்ந்தார், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பாஜ தன் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறது. தவிர, இந்த வழக்கு தினந்தோறும் இங்கு நடக்கும் போது வெளியே நாடு முழுக்க பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது,'' என்றார், சிபல். உடனே இன்னொரு வக்கீல் ராஜிவ் தவன். இவரும் ஒரு முஸ்லிம் மனுதார் சார்பாக வாதாடுபவர், “ தலைமை நீதிபதி மிஸ்ரா அடுத்த ஆண்டு 2018 அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் தீர்ப்பு அளிக்க வேண்டும். இந்த வழக்கில் ஏறக்குறைய 90,000 பக்கம் டாகுமென்ட்கள் உள்ளன…ஏன் அவசரப்பட வேண்டும்,'' என்பது அவரது கேள்வி.

அதாவது 2019 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வந்துவிடும். அது வரக் கூடாது என்பது இந்த வக்கீல்களின் வாதம். “இது என்ன பைத்தியக்காரத்தனமாக வாதமாக இருக்கிறதே” என நீதிபதிகள் இந்த வக்கீல்களின் வாதங்களை தள்ளுபடி செய்து வழக்கைத் தொடர்ந்தனர். கடைசியில் அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்விற்கு மாற்றுவதா, வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பு வழங்கியது தீபக் மிஸ்ரா அமர்வு. 5 நீதிபதிகள் அமர்வு தேவையில்லை என இவர்கள் தீர்ப்பளித்தாலும், பின்னால் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோகோய் 5 நீதிபதிகள் அமர்விற்கு இந்த விவகாரத்தை அனுப்பினார். இதைப் பற்றி தனியே எழுதிகிறேன்.

பதவி நீக்கம் செய்யுங்கள் நீதிபதி மிஸ்ராவை


ஒரு பக்கம் அயோத்தி விவகாரம், இன்னொரு பக்கம் தலைமை நீதிபதி மிஸ்ரா மீது சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள்... நீதித்துறை தனித்து செயல்பட முடியவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் மிஸ்ரா என பல குற்றச்சாட்டுகளை வைத்து இவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ராஜ்ய சபாவில் சமர்ப்பித்தது காங்கிரஸ்.

இதற்கு தலைமை தாங்கியவர் சீனியர் வக்கீல் கபில் சிபல். நீதிபதிகளை, உயர் நீதிமன்றமோ உச்ச நீதிமன்றமோ எதுவாக இருந்தாலும் பதவி நீக்கம் செய்வது சாதாரண விஷயம் கிடையாது. அது எளிதும் இல்லை.

சம்பந்தப்பட்ட நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு அதற்கான ஆதாரங்களுடன் 50 ராஜ்ய சபா அல்லது 100 லோக்சபா எம்பிக்கள் கையெழுத்திட்டு பார்லிமென்டில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு சபாநாயகரோ அல்லது ராஜ்ய சபாவின் தலைவரோ பதவி நீக்க தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு விவாதம் நடைபெறும். பிறகு நடக்கும் வாக்கெடுப்பில் எம்பிக்களில் மூன்றில் இரண்டு பங்கு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

இது மிகப்பெரிய நடைமுறை. இதுநாள் வரை எந்த ஒரு நீதிபதியும் இப்படி பதவி நீக்கம் செய்யப்படவில்லை. பலருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சில வாக்கெடுப்பில் தோற்றுவிட்டது. ஒரு சில நீதிபதிகள் தானாகவே பதவி விலகிவிட்டனர்.

தீபக் மிஸ்ராவின் பதில்


நீதிபதிகளைப் பற்றி யாராவது விமர்சித்தாலோ அல்லது குற்றம் சாட்டினாலோ அரசியல்வாதிகள் மாதிரி நீதிபதிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் பக்க நியாயத்தை சொல்ல முடியாது. காரணம் நீதிபதிகள் யாரையும் சந்திக்க மாட்டார்கள். நீதிபதிகள் என்ன சொல்ல விரும்பினாலும் அவர்கள் எழுதும் தீர்ப்பில்தான் சொல்ல முடியும். இதுதான் நடைமுறை. நீதிபதி மிஸ்ராவிற்கு எதிராக சக நீதிபதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மிஸ்ரா பதில் அளித்தார். எப்படி?

நேரடியாக எதுவும் பேசாமல் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் மூலமாக பதில் அளித்தார். மிஸ்ரா என்ன சொல்ல விரும்பினாரோ அதையெல்லாம் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என குற்றச்சாட்டுகளுக்கு ஆதார பூர்வமாக மறுப்பு அந்த ஆங்கில தினசரியில் வெளியானது. இது காங்கிரசுக்கு, குறிப்பாக கபில் சிபலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவுதான் நீதிபதி மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம். இதுவரை எந்த ஒரு தலைமை நீதிபதிக்கும் எதிராக இப்படி ஒரு தீர்மானம் வந்ததே கிடையாது.

இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இந்த தீபக் மிஸ்ராவின் மாமாதான் முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா. இந்த ரங்கநாத் மிஸ்ரா, எந்த ஒரு நீதிபதியும் செய்யாத காரியத்தைச் செய்தார். பதவி ஓய்விற்கு பிறகு காங்கிரசில் சேர்ந்து 6 ஆண்டுகள் ராஜ்ய சபா எம்பியாக இருந்தார். உங்கள் சேனல் என் பெயரைக் கெடுத்துவிட்டது

உச்ச நீதிமன்றத்தில் மீடியாவிற்கு இரண்டு பெரிய குளிர் சாதன அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பத்திரிகையாளர்கள் அமர்ந்து வேலை செய்யலாம். இன்டர்நெட், தொலைபேசி, டிவி, மதிய சாப்பாட்டை சூடாக்கிக் கொள்ள வார்மர் என பல வசதிகளை பத்திரிகையாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

30க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் இங்கு வருவர். நீதிபதி மிஸ்ரா பத்திரிகையாளர்களிடம் தனியாக பேசுவதைத் தவிர்ப்பவர்.

ஓரிரண்டு நிருபர்களிடம் மனம் விட்டு பேசுவார். அதில் நானும் ஒருவன். ஆனால் எந்த ஒரு செய்தியையும் அவரிடமிருந்து வாங்க முடியாது. ஒரு நாள் திடீரென செகரட்ரி ஜெனரலிடமிருந்து போன்.- 'தலைமை நீதிபதி உங்களைப் பார்க்க விரும்புகிறார்' என்றார், அவர். நானும் எங்களுடைய ஹிந்தி சேனல் செய்தியாளர் ஆஷிஷ் பார்கவுடன் நீதிபதி மிஸ்ராவைப் பார்க்க சென்றோம். கோர்ட் ரூம் 1க்கு பின்னால் நீதிபதி மிஸ்ராவின் அறை. பலத்த செக்யூரிட்டி. செகரட்ரி ஜெனரல் எங்களை அழைத்து சென்றார்.

அவரது அறையை ஒட்டி ஒரு சின்ன அறை. அங்குதான் பார்வையாளர்களை சந்திப்பார் மிஸ்ரா. உள்ளே சென்றோம். டீ வந்தது. அருந்தினோம். சிறிது நேரத்தில் உள்ளே வந்தார் மிஸ்ரா. கோட், டை சகிதமாக கருப்பு அங்கி இல்லாமல் ஸ்மார்ட் ஆக இருந்தார். வழக்கமான சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு அவர் என்னிடம் சொன்னார். “உங்கள் டிவி என் பெயரைக் கெடுத்துவிட்டது. எனக்கு மிகப் பெரிய களங்கம் ஏற்படுத்திவிட்டது,'' என்றார், வருத்தத்துடன்.

எதற்காக அவர் இப்படி சொன்னார் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது. எங்கள் டிவி விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த வழக்கறிஞர் நீதிபதி மிஸ்ராவை கண்டபடி பேசிவிட்டார். இந்த விவாதம் லைவ் ஆக இருந்ததால் அவருடைய பேச்சை எடிட் செய்ய முடியவில்லை. நெறியாளர் எவ்வளவோ முயற்சித்தும் அந்த வக்கீலைக் கட்டுப்படுத்த முடியவில்லை, மிஸ்ராவை ஒரு வழியாக்கிவிட்டார். இதை மனதில் வைத்துதான் அவர் அப்படி சொன்னார்.

“எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கோர்ட்டில் நடப்பதை நாங்கள் தவறாக ரிப்போர்ட் செய்தால் சொல்லுங்கள். ஆனால் இந்த விவாதத்தில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை முடிவு செய்வது நிகழ்ச்சியை நடத்தும் பெண்மணிதான்,'' என்றோம், நாங்கள். ஆனால் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. “உங்களுடைய டிவி அதிபர் பிரணாய் ஏன் இப்படி செய்துவிட்டார்” என குமுறினார். அவர் கேட்ட அடுத்த கேள்வி எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏன் காங்கிரஸ் எதிர்க்கிறது?

“ஏன் காங்கிரஸ் என்னை எதிர்க்கிறது? என்னைப் பதவி நீக்கம் செய்வதில் ஏன் குறியாக இருக்கிறார்கள்? நான் என்ன தப்பு செய்தேன்” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார் நீதிபதி தீபக் மிஸ்ரா. நானும் ஆஷிஷும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். ஆஷிஷ், “ சார், நீங்க கவர்ன்மெண்டிற்கு (பாஜ அரசுக்கு) சாதகமாக செயல்படுகிறீர்கள் என்பது காங்கிரசின் குற்றச்சாட்டு,” என்றார்.

மிஸ்ரா என்னைப் பார்த்தார். “உண்மைதான் சார். நீங்கள் மத்தியில் உள்ள பாஜ அரசுக்கு ஆதரவாக இருப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது,” என்றேன், நான். ஒரு பத்து வினாடிகள் அறையில் அமைதி நிலவியது. “ஏதாவது ஒரு ஆர்டரோ அல்லது ஜட்ஜ்மென்டோ காட்டுங்கள், நான் அரசுக்கு உதவியிருக்கிறேன் என்று...” இப்படி சற்று கோபத்துடனே சொன்னார் நீதிபதி மிஸ்ரா.

“இதுவரை எத்தனையோ தீர்ப்புகள் வழங்கியுள்ளேன். முக்கிய வழக்குகளில் அரசுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளேன்,” என தொடர்ந்தார். “அயோத்தி வழக்கில் நீங்கள் பாஜ அரசுக்கு சாதகமாக தீர்ப்பளித்துவிடுவீர்கள் என் காங்கிரஸ் பயப்படுகிறது,” என்றார் ஆஷிஷ். “வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது எப்படி தீர்ப்பு இப்படித்தான் வரப் போகிறது என அவர்கள் சொல்ல முடியும்,” என்றார் மிஸ்ரா.

“இதுவரை நான் அளித்த தீர்ப்புகள் என்னுடையது மட்டுமல்ல... என்னுடன் அமர்ந்த சக நீதிபதிகளும் ஒத்துக்கொண்டு அதில் கையெழுத்திட்டுள்ளனரே... அதில் என்னை மட்டும் குறி வைப்பது ஏன்,” என கேள்வி எழுப்பினார் மிஸ்ரா.

“சில காங்கிரஸ் வக்கீல்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. அதனால் கட்சி தலைமையிடம் நீங்கள் மத்திய அரசுக்கு உதவுகிறீர்கள் என போட்டு கொடுத்துவிட்டனர்,” என்றோம் நாங்கள்.

பின்னர் பல விஷயங்களைப் பற்றி பேசினார். ஆனால் அவருக்கு எதிராக பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டேன் என கறாராக இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் வெளியே வந்துவிட்டோம். எதற்கு நீதிபதி தீபக் மிஸ்ரா மீது காங்கிரஸ் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தது என்பது இதுவரை புரியவில்லை. கடைசியில் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து டிஸ்மிஸ் செய்துவிட்டார் ராஜ்ய சபா தலைவர் வெங்கய்யா நாயுடு.

- அ.வைத்தியநாதன்

Image 1528305

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: vaithi@dinamalar.in






      Dinamalar
      Follow us