UPDATED : ஜன 04, 2024 01:48 PM
ADDED : ஜன 04, 2024 12:54 AM

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி, 7,000 பேருக்கு ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடியை தவிர, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமாயணம் காவியத்தின், 'டிவி' சீரியலில், ராமர் மற்றும் சீதை கதாபாத்திரங்களில் நடித்த, நடிகர் அருண் கோவில், நடிகை தீபிகா சிக்லியா ஆகியோரும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், யோகா குரு பாபா ராம்தேவ், தொழிலதிபர் ரத்தன் டாடா உட்பட, 3,000 வி.வி.ஐ.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, நாடு முழுதும் உள்ள சாதுக்கள் மற்றும் துறவியர் பங்கேற்கின்றனர்.
ஹோட்டல் முன்பதிவு
அயோத்தியில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வி.வி.ஐ.பி.,க்கள் குவிந்துள்ளதால், பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் அவர்கள் தங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, 'தி ராமாயணம், க்ரினோஸ்கோ, சிக்னெட் கலெக் ஷன், ராடிசன்' உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்கள், தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளன அல்லது ஒத்தி வைத்துள்ளன.
இருப்பினும், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பட்ஜெட் ஹோட்டல்கள், தங்குமிடங்கள், பக்தர்களுக்கான ஓய்வு இல்லங்கள் போன்றவற்றில், நட்சத்திர ஹோட்டல்களில் அறை கிடைக்காதவர்களுக்கு உணவளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1885ல் அமைக்கப்பட்ட, 'ஸ்ரீ நாட்டுக்கோட்டை நகர சத்திரம்' என்ற ஓய்வு இல்லத்தில், தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு உணவளிக்கப்பட உள்ளது.
இது, ஹனுமன் கர்ஹியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இதன் மேலாளர் லட்சுமணன் அண்ணாமலை கூறுகையில், ''தமிழகத்தில் இருந்து வருவோருக்கு, நியாயமான விலையில், நாங்கள் தங்குமிடம் மற்றும் உணவை வழங்கி வருகிறோம்,'' என்றார்.
![]() |
'டென்ட்' சிட்டி திட்டம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 'டென்ட் சிட்டி' எனப்படும் கூடார நகரம் அமைக்கும் பணியை, 'பிரவேஜ்' நிறுவனத்துக்கு, அயோத்தி மேம்பாட்டு கமிஷன் வழங்கியது. இந்த திட்டம், அயோத்தியில் உள்ள பிரம்ம குண்டம் அருகே வருகிறது.
அயோத்தி மேம்பாட்டு கமிஷனால் குத்தகைக்கு விடப்பட்ட, 8,000 சதுர மீட்டர் நிலத்தில், 45 நாட்களில் கூடார நகரம் உருவாக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நீர்ப்புகா கூடாரங்கள், ஒரு சாப்பாட்டு கூடம் மற்றும் திறந்தவெளி இருக்கைகளுடன் கூடிய, 30 கூடாரங்கள் சுற்றுலா பயணியருக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, சைவ உணவை மட்டுமே வழங்கப்படும்; அயோத்தியின் வரலாற்றை சித்தரிக்கும் நேரடி கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த இடத்தில், மது அருந்தவும், புகைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அர்ச்சகர்கள், கரசேவகர்கள், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மற்றும் வி.எச்.பி., உறுப்பினர்களுக்காக, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வாயிலாக, மூன்று கூடார நகரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
வணிக மையம்
அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதால், வியாபாரம் பெருகும். இதனால், கோவிலுக்கு வரும் வழிகளில், பிரசாதமாக லட்டு, பூக்கள், ராமர் சிலைகள் போன்றவற்றை வியாபாரிகள் விற்பனை செய்வர். பள்ளி செல்லும் சிறுவர் - சிறுமியர் மற்றும் பெண்கள், பக்தர்களுக்கு நெற்றியில், ஹிந்தியில், 'ஸ்ரீ ராம்' என எழுத தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இதற்கு, 10 ரூபாய் - 100 ரூபாய் வரை என கட்டணம் மாறுபடும். ஒருசிலர் தங்களை சுற்றுலா வழிகாட்டி என அடையாளப்படுத்தி, 300 ரூபாய் கட்டணத்தில் அயோத்தியை சுற்றி காட்ட தயாராக இருக்கின்றனர்.
கண்காணிப்பு கேமரா
அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், உ.பி., போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ராமர் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுஉள்ளன.
அயோத்தி ஐ.ஜி., பிரவீன் குமார் கூறுகையில், ''அயோத்தியில் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் எத்தனை வீடுகள் உள்ளன; அவற்றில் எத்தனை பேர் வசிக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
''மேலும், இந்த வீடுகளில் வசிப்போரை யார் யார் வந்து சந்திக்கின்றனர் என்பது குறித்தும் விசாரிக்கிறோம். சந்தேகத்துக்குரிய வீடுகள் மீது, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.
இந்த வீடுகளை கண்காணிக்க, அயோத்தி காவல் துறை சிறப்பு பிரிவை உருவாக்கி உள்ளது.
'ராமர் கோவிலுக்கு செல்லும் வழியை, யார் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம் என்பதால், இந்த வீடுகள் அமைந்துள்ள இடம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது' என, போலீசார் தெரிவித்தனர்.
குரங்குகள் சாப்பிடும் பொருட்களை எடுத்துச் செல்லாத வரை, பக்தர்கள் பயப்பட வேண்டியதில்லை.
- - நமது சிறப்பு நிருபர் -


