ADDED : ஜன 12, 2024 11:57 PM

அயோத்தியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பகலிரவு பாராமல் நடக்கின்றன.
கும்பாபிஷேகத்துக்கு இன்னும், 10 நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, அயோத்தியில் காவி கொடிகள் உட்பட பூஜை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர் முகேஷ் குமார் கூறியதாவது:
அயோத்தியின் பல்வேறு இடங்களில் பூஜைகள் நடத்தப்படுவதால், காவி கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், மற்ற மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. ஒரு நாளைக்கு, 10,000 - 12,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
குறிப்பாக, கடவுள் ராமர், ஹனுமன் மற்றும் ராமர் கோவிலின் படங்கள் அச்சிடப்பட்ட காவி கொடிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. 50 - 1,000 ரூபாய் வரை என, அளவுக்கேற்ப காவி கொடி கிடைக்கிறது.
தற்போது இந்த காவி கொடிகளை வாங்கி, பொது மக்கள் தங்கள் வீடுகளிலும் ஏற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.