UPDATED : ஜன 16, 2024 11:26 PM
ADDED : ஜன 16, 2024 11:22 PM

அயோத்தி,: உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் நிர்மாணிக்கப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான பாரம்பரிய சடங்குகள் நேற்று யாகத்துடன் துவங்கின. 21ம் தேதி வரை தொடரும் சடங்குகளை அடுத்து மறுநாள் கும்பாபிஷேகம் நடந்தேறும்.
இது குறித்து, ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:
ஆகம, வேத சம்பிரதாயங்களின்படி கும்பாபிஷேகத்துக்கு முன்பான சடங்குகள் துவங்கியுள்ளன. பிராயசித்த பூஜையும், கர்மகுடி பூஜையும் நடத்தப்பட்டன.
முதல் நாள் யாகத்தில், 11 வேத விற்பன்னர்கள் பங்கேற்றனர். கோவிலின் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மேற்பார்வை செய்கிறார். காசியைச் சேர்ந்த லக் ஷிகாந்த் தீட்சித் தலைமையில் பூஜைகள் நடக்கின்றன. கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் தலைமையில், 121 வேத விற்பன்னர்கள் பங்கேற்கின்றனர்.
இன்று பால ராமர் விக்ரகத்துடன் ஊர்வலம் நடைபெறும். பரிசர் பிரவேஷ் என்பது அதற்கான பெயர். அயோத்தி கோவில் வளாகத்தில் ராமர் பிரவேசம் செய்வதை குறிக்கும் நிகழ்வு இது.
நாதஸ்வர இசை
ஒரு வார சடங்குகளின்போது, ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியமான இசைக் கருவிகளின் மங்கல இசை நிகழ்ச்சி இடம்பெறும்.
தமிழகத்தில் இருந்து நாதஸ்வரம் மற்றும் மிருதங்கம் வாசிக்கப்படும். திறப்பு விழாவில் 8,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 50 நாடுகளை சேர்ந்த 53 விருந்தினர்கள் வரவுள்ளனர்.
திறப்பு விழாவுக்கு பின், 26ம் தேதி முதல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. தொண்டர்கள், குழுக்களாக அனுமதிக்கப்படுவர். அடுத்த மாதம் வரை இது தொடரும். கோவில் கட்டுமானம் முழுமை பெறுவதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவதா என சிலர் விமர்சிக்கின்றனர். தேவையற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.இவ்வாறு ராய் கூறினார்.
![]() |


