ரூ.400 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம்: சுவரெங்கும் மிளிரும் ராமாயண ஓவியங்கள்
ரூ.400 கோடியில் பிரமாண்ட பஸ் நிலையம்: சுவரெங்கும் மிளிரும் ராமாயண ஓவியங்கள்
UPDATED : ஜன 08, 2024 12:11 AM
ADDED : ஜன 08, 2024 12:10 AM

திருவிழா கோலம் பூண்டுள்ள அயோத்திக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில், 400 கோடி ரூபாய் செலவில், ஒன்பது ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கலையரங்கின் சுவர்கள் முழுதும் ராமாயண காட்சிகளை விளக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பிரமாண்ட பஸ் நிலையம்
ராமாயணத்தில் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான தேதி குறிக்கப்பட்டதும், அயோத்தி நகரமே தேவலோகம் போல் ஜொலித்து, திருவிழா கோலம் பூண்டதாக படித்திருப்போம்.
ராமர் கோவிலுக்கான கும்பாபிஷேக தேதி குறிக்கப்பட்டதிலிருந்து, அயோத்தி நகரம் இப்போதும் அப்படித் தான் காட்சியளிக்கிறது.
திரும்பும் திசையெங்கும் காவிக் கொடிகள், பிரமாண்டமான கட்டுமான பணிகள், ஜெய் ஸ்ரீராம் கோஷம் என, மிகப் பெரிய கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது அயோத்தி. அயோத்திக்கான தற்போதைய பஸ் நிலையம், நகரிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் பைசாபாத் என்ற இடத்தில் உள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், நாடு முழுதும் இருந்து பக்தர்கள் அதிகம் வருவர் என்பதால், அயோத்தியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் லக்னோ - கோரக்பூர் நெடுஞ்சாலை அருகே, 400 கோடி ரூபாய் செலவில், ஒன்பது ஏக்கரில் பிரமாண்ட பஸ் நிலையம் கட்டப்பட்டு, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
புதுடில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா, மதுரா, அஜ்மீர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து, மக்கள் எளிதாக அயோத்திக்கு வந்து செல்ல வசதியாக, தொலைநோக்கு பார்வையுடன் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
வெளியூர்களில் இருந்து பஸ்கள் எளிதாக வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், இரண்டு அடுக்கு மேம்பாலங்களும் வேகமாக தயாராகி வருகின்றன.
கலை அரங்கு, வணிக வளாகம், உணவகங்கள், வங்கி, ஏ.டி.எம்., நவீன கழிப்பறை, மருத்துவ வளாகம், தபால் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், உதவி மையம், பல அடுக்கு வாகன நிறுத்தம் என, உலக தரத்திலான வசதிகளுடன் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் மற்றும் கலையரங்கின் சுவர்கள் முழுதும் ராமாயண காட்சிகளை தத்ரூபமாக விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதிலும், ராமர் - சீதா திருமணம் தொடர்பான ஓவியங்கள் கொள்ளை அழகு.
![]() |
ராமாயண பாடல்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பின், இந்த கலையரங்கில் தினமும் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் உ.பி., அரசு முடிவு செய்துள்ளது. பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்களில் ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் பாடல்களை ஒளிபரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அயோத்திக்கு வந்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது, நள்ளிரவில் வந்து பஸ் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அடுத்த சில நாட்களில் அயோத்தி நகரம், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பெறப் போகிறது என்பதை, இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு நன்றாகவே உணர்த்துகின்றன.
- நமது நிருபர் -