ADDED : ஜன 02, 2024 06:48 AM
பெங்களூரு: ''அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு எங்கள் கட்சி மற்றும் அரசின் ஆதரவு உண்டு,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடகாவின் திட்டம், புள்ளியியல் துறை அமைச்சர் டி.சுதாகர். இவர் நேற்று முன்தினம் கூறுகையில், ''கடந்த லோக்சபா தேர்தலின் போது, புல்வாமா பயங்கரவாத தாக்குலை பா.ஜ., அரசியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டது. அதுபோல், இம்முறை ராமர் கோவில் விஷயத்திலும் அரசியல் ஸ்டன்ட் செய்கின்றனர்,'' என்றார்.
மேலும், ஐ.டி., - பி.டி., துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், ''கடந்த லோக்சபா தேர்தலின் போது, ராமர் கோவில் எங்கிருந்தது. ஓட்டுகள் பெறுவதற்காக, ஆன்மிக நம்பிக்கையை பா.ஜ., பயன்படுத்தி கொள்கிறது,'' என்றார்.
இந்த இரண்டு அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'காங்கிரசார் ஹிந்து விரோதிகள்' என்று பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதை சரிகட்டும் வகையில், முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு எங்கள் கட்சி மற்றும் அரசின் ஆதரவு உண்டு.
கோவில் திறப்பு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. அழைப்பு வந்தால், செல்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

