ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் 70 தொகுதிகளிலும் அமைகிறது
ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் 70 தொகுதிகளிலும் அமைகிறது
ADDED : ஏப் 19, 2025 10:14 PM
புதுடில்லி:'மே மாதத்துக்குள் டில்லி மாநகர் முழுதும் 70 இடங்களில் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் அமைக்கப்படும்' என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி அரசின் சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தலைநகர் டில்லியின் 70 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒன்று வீதம் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் அமைக்கும் பணி, மே மாத இறுதிக்குள் நிறைவடையும்.
தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் ஆகியவையும் மேம்படுத்தப்படும்.
இதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டன. அதில், 10 முதல் 15 தொகுதிகளில் பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மத்திய அரசின் 2,400 கோடி ரூபாய் நிதியுதவியுடன், இந்தத் திட்டத்தில் மொத்தம் 1,139 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்கள் டில்லி முழுதும் திறக்கப்படும் என முதல்வர் ரேகா குப்தா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு மிஷன் திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த திட்டம் துவக்கப்படுகிறது.
மொஹல்லா கிளினிக்குகளின் தற்போதைய சேவைகளின் அடிப்படையில் புதிய மையங்கள் கட்டப்படும். மேலும் அவை பொது வெளிநோயாளர் பராமரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களுக்கான தடுப்பூசி மற்றும் பரிசோதனை உள்ளிட்ட தாய்,சேய் நல சுகாதார சேவைகளை வழங்கும்.
கடந்த, 5ம் தேதி துவக்கப்பட்ட 'ஆயுஷ்மான் பாரத்' சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 1.75 லட்சம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

