'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்
'ஆயுஷ்மான் பாரத்' திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்
ADDED : செப் 24, 2025 03:05 AM

புதுடில்லி: 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2018, செப்., 23ல், 'ஆயுஷ்மான் பாரத்' காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. நம் நாட்டில் நலிவடைந்த பிரிவினரின் மருத்துவ சிகிச்சைக்காக இத்திட்டம் துவங்கப்பட்டது. இதில், 55 கோடி மக்கள் இணைந்துள்ளனர். நாடு முழுதும் 32,000 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நாட்டின் எந்த மருத்துவமனையிலும் ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெற முடியும். அதிகபட்சமாக தமிழகத்தில் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதற்கு அடுத்தப்படியாக, கர்நாடகாவில் 66 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் துவங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுதும் இதுவரை 6.5 கோடிக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இதற்காக 82,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது.
இதில், 1.15 கோடி பேர் 45 முதல் 59 வயதினர். பாதிக்கப்பட்ட நபர்களில், அதிகபட்சமாக இதயம், சிறுநீரக பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.