பாபா சித்திக்கை கொன்றது ஏன்? போலீசில் சிக்கிய நபர் பகீர் வாக்குமூலம்
பாபா சித்திக்கை கொன்றது ஏன்? போலீசில் சிக்கிய நபர் பகீர் வாக்குமூலம்
UPDATED : அக் 19, 2024 03:37 PM
ADDED : அக் 19, 2024 03:30 PM

மும்பை: '' மஹாராஷ்டிராவில் கொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கிற்கு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உடன் தொடர்பு உள்ளது,'' என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த குற்றவாளி ஒருவன் போலீசிடம் வாக்குமூலம் அளித்து உள்ளான்.
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இக்கொலைக்கு சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் இக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் என தெரிகிறது.
இந்நிலையில், டில்லியில் ஜிம் உரிமையாளர் நதீர் ஷா என்பவர் கொலை வழக்கில், பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த யோகேஷ் என்ற ராஜூ கைது செய்யப்பட்டு உள்ளான். இவனுக்கும் பாபா சித்திக் கொலை சம்பவத்திற்கும் நேரடி தொடர்பு இல்லை.
அவன் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது; பாபா சித்திக் நல்லவர் இல்லை என்பதால் கொலை செய்யப்பட்டார். அவர் மீது மஹாராஷ்டிரா குற்றத்தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளது. அவருக்கும், 1993 ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு உள்ளது. இத்தகைய நபர்களுடன் யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு ஏதும் நடக்கலாம். அது தான் பாபா சித்திக்கிற்கும் நடந்து உள்ளது. இவ்வாறு அவன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.