ADDED : அக் 17, 2024 10:37 PM
மும்பை: '' எனது தந்தை பாபா சித்திக் கொலைக்கு நீதி வேண்டும்'', என அவரது மகன் ஜீஷான் கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 13ம் தேதி இரவு மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். இக்கொலைக்கு சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்நிலையில் பாபா சித்திக்கின் மகன் ஜூஷான் சித்திக் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஏழை அப்பாவி மக்களின் உயிரையும், வீடுகளையும் பாதுகாத்ததற்காக எனது தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று எங்களது குடும்பம் உடைந்துள்ளது. அவரது மரணம் அரசியல் ஆக்கப்படக்கூடாது. அதேநேரம் அது வீணாகிவிடக்கூடாது. எனது தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் ஜீஷான் கூறியுள்ளார்.
