ADDED : டிச 06, 2024 06:34 AM
பல்லாரி: பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்து கர்ப்பிணியர் இறந்துள்ளனர். இச்சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுகுப்பா அருகே உள்ள சீரகேராவை சேர்ந்த கங்கோத்ரி பிரசவத்திற்காக, மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, இரண்டாவது பிரசவம். சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என கூறப்பட்ட நிலையில், சிசேரியன் எனும் அறுவை சிகிச்சையில் பிரசவம் நடந்தது.
நேற்று காலையில், ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இதனை கேட்ட குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலே உயிரிழந்தது.
'குழந்தை தாய் வயிற்றில் இருக்கும் போது, மலத்தை உண்டதால் இறந்துவிட்டது' என டாக்டர்கள் கூறினர். 'இது உண்மையல்ல, டாக்டர்களின் அலட்சியமே இறப்பிற்கு காரணம்' என உறவினர்கள் கூறினர்.
பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது, குழந்தைகள் உயிரிழப்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.