குழியில் வீசப்பட்ட ஆண் சிசு சிகிச்சை பலனின்றி மரணம்
குழியில் வீசப்பட்ட ஆண் சிசு சிகிச்சை பலனின்றி மரணம்
ADDED : ஜன 27, 2025 11:34 PM
மைசூரு; பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் சிசு, குழியில் வீசப்பட்டது. மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.
மைசூரு மாவட்டம், சஹூகர் ஹுண்டி கிராமத்தில் குளத்தின் அருகே நேற்று முன்தினம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை அழும் குரல் கேட்டது. குளம் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில நாட்களே ஆன ஆண் சிசு அழுது கொண்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஆஷா சுகாதார ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், குழந்தையை மீட்டு, மைசூரு நகரில் உள்ள செலுவாம்பா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அக்குழந்தை உயிரிழந்தது.
குழந்தைகள் உதவி மைய அதிகாரி குருதேவ் கூறியதாவது:
பண்ணை குளம் அருகில் குழந்தையை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அக்கிராமத்தினர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இறந்துவிட்டது.
குழந்தை வீசப்பட்ட பகுதி, இலவாலா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. துணியில் சுற்றப்பட்டு வீசப்பட்டதால், குழந்தைகள் ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஒருவேளை திருமணம் ஆகாதவர்களுக்கு இக்குழந்தை பிறந்ததால் துாக்கி வீசியிருக்கலாம். கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தையின் பெற்றோர் குறித்து கிராமத்தினர் தகவல் தர மறுக்கின்றனர். இதுபோன்று, சிறுமியர் குழந்தை பிரசவிப்பது மைசூரு மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. அத்தகையவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின், குழந்தைக்கு இறுதிச்சடங்கு நடத்தப்படும். குழந்தையின் டி.என்.ஏ., ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைத்த பின், போலீசார் விசாரணையை துவக்குவர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
எங்கள் மையத்தில் இதுவரை 60 குழந்தைகள் வந்துள்ளன. திருமணமாகி, குழந்தை இல்லாதவர்கள், சட்டப்படி தத்தெடுக்கலாம். குழந்தை வேண்டாம் என்றால் வீசி எறிய வேண்டாம்.
குழந்தைகள் உதவி எண்ணான, 1098 என்ற எண்ணுக்கு தெரிவித்து, எங்களிடம் ஒப்படைக்கவும். குழந்தை இல்லாதவர்களுக்கு சட்டப்படி தத்து கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.