அரசியல்வாதிகளை புண்படுத்தினேனா? : மறுக்கிறார் கிரண் பேடி
அரசியல்வாதிகளை புண்படுத்தினேனா? : மறுக்கிறார் கிரண் பேடி
ADDED : ஆக 29, 2011 12:15 AM

புதுடில்லி : ''அரசியல்வாதிகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், நான் எதுவும் விமர்சிக்கவில்லை,'' என, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி கூறியுள்ளார்.
ராம்லீலா மைதானத்தில், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது, அவரது ஆதரவாளரும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியுமான கிரண் பேடி, மேடையில் தோன்றி, அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து பேசினார். உண்ணாவிரதத்தின் 11வது நாளின் போது, ராம்லீலா மைதானத்துக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த கோபிநாத் முண்டே, அனந்த குமார் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது மேடைக்கு வந்த கிரண் பேடி, தன் தலையில் துணியால் மூடிக்கொண்டு, ஆவேசமாக பேசினார். குறிப்பாக, பா.ஜ., தலைவர்களை கிண்டலடிப்பதுபோல், 'இந்த அரசியல்வாதிகளை பாருங்கள். இவர்கள் பல முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர். இங்கே ஒரு மாதிரியும், வெளியே சென்று வேறு மாதிரியும் பேசுகின்றனர்' என்றார். கிரண் பேடியின் இந்த விமர்சனம், அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கிரண் பேடி நேற்று கூறுகையில்,''அரசியல்வாதிகளின் மனதை புண்படுத்தும் நோக்கத்தில், நான் பேசவில்லை. நான் நினைத்ததற்கு மாறாக நடந்து விட்டது,'' என்றார்.