
தோசைகளில் பல வகை உண்டு. வெங்காய தோசை, காய்கறிகள் தோசை, மசாலா தோசை, வெண்ணெய் தோசை, முட்டை தோசை என, விதவிதமான தோசைகளை செய்து ருசிக்கலாம். எந்த தோசையாக இருந்தாலும், முதல் நாளே அரிசி, உளுந்து ஊறவைத்து, மாவு அரைத்து வைத்திருக்க வேண்டும்.
ஆனால் மைதா தோசைக்கு, மாவு ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மைதா தோசை தயாரிக்க வெறும் 10 நிமிடங்கள் போதுமானது. அதை எப்படி செய்வது என, பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
மைதா மாவு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில், மைதா மாவை போட்டு சிறிது, சிறிதாக தண்ணீர் விட்டு, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். இது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். கட்டி, கட்டிகளாக இருந்தால் தோசை சரியாக வராது. இதை நினைவில் கொள்ளுங்கள்.
கரைத்து வைத்த மாவில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி இலையை போட வேண்டும். தேவையான அளவில் உப்பு போட்டு, அனைத்து பொருட்களும் மாவில் சேரும்படி நன்றாக கலக்குங்கள். அதன்பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து, எண்ணெய் தடவி சூடானதும் தோசை ஊற்றுங்கள். இரண்டு பக்கமும், பொன்னிறமாக வெந்ததும் எடுத்து, சூடாக பரிமாறுங்கள்.
காலை அல்லது மாலை டிபனுக்கு செய்யலாம். வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். செய்வதும் எளிது. வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தாலும், மைதா தோசை செய்து கொடுத்து அசத்துங்கள். தேங்காய் சட்னி அல்லது கார சட்னி பொருத்தமாக இருக்கும்
- நமநு நிருபர் -.

