ADDED : நவ 13, 2024 09:49 PM

கர்நாடகா- - கேரளா மாநில எல்லையில் உள்ளது தட்சிண கன்னடா மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைநகரான மங்களூரில் இருந்து கேரளாவின் காசர்கோடுக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.
காசர்கோடு கடற்கரையில் பேகல் கோட்டை உள்ளது. இந்த கோட்டை, கர்நாடகாவின் ஷிவமொக்கா பகுதியை சேர்ந்த சிவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. கேரளாவில் உள்ள மிகப்பெரிய கோட்டையில் இதுவும் ஒன்று. கோட்டையில் இருந்து கடலின் அழகை கண்டு ரசிக்கலாம்.
கோட்டையின் நடுவில் நின்று மவ்வல், கொட்டிகுளம், உடுமா நகரங்களை கண்டு ரசிக்கலாம். பழங்கால கோட்டை என்பதால் இந்த கோட்டைக்குள் பழங்கால தொல்பொருள்கள், நாணயங்கள் உள்ளதாகவும் வரலாறு கூறுகிறது.
இதனால் இந்த கோட்டையை தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.
கடந்த 1992 க்கு பிறகு இந்த கோட்டையை சிறப்பு சுற்றுலா பகுதியாக மத்திய அரசு அறிவித்தது. பம்பாய் தமிழ் திரைப்படத்தின் உயிரே... உயிரே... வந்து என்னோடு கலந்துவிடு என்ற தமிழ் பாடலும் இந்த கோட்டையில் தான் எடுக்கப்பட்டுள்ளது.
கோட்டை இருப்பது கேரளாவில் என்றாலும் அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கன்னடம், துளு மொழிதான் பேசுகின்றனர். இதனால் வேறு மாநிலத்திற்குள் சென்றோம் என்ற உணர்வே கர்நாடக சுற்றுலா பயணிகளுக்கு இருக்காது.
பெங்களூரில் இருந்து காசர்கோடுக்கு நேரடியாக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்பவர்கள் மங்களூரு சென்று அங்கிருந்து கேரளா செல்லும் ரயில்களில் காசர்கோடை சென்றடையலாம். விமானத்தில் சென்றால் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து வாடகை கார்களில் செல்லலாம்.
- நமது நிருபர் --

