பா.ஜ.,வில் இணைந்த பகுஜன் சமாஜ் எம்.பி., காங்., எம்.எல்.ஏ.,க்கள்
பா.ஜ.,வில் இணைந்த பகுஜன் சமாஜ் எம்.பி., காங்., எம்.எல்.ஏ.,க்கள்
UPDATED : பிப் 25, 2024 03:41 PM
ADDED : பிப் 25, 2024 03:40 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியினர் பா.ஜ.,வில் சேர்வது அதிகரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய எம்.பி.,யான ரித்தேஷ் பாண்டே, இன்று பா.ஜ.,வில் இணைந்தார். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத மக்கள் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் பா.ஜ.,வில் இணைந்தனர்.
உ.பி., மாநிலம் அம்பேத்கர் நகர் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் ரித்தேஷ் பாண்டே(42). பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவரது தந்தையும் உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சி சார்பில் எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.
இந்நிலையில், ரித்தேஷ் பாண்டே இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி டில்லியில் பா.ஜ.,வில் இணைந்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‛‛ பிரதமரின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.,வில் இணைந்தேன் '' என்றார்.
அருணாச்சல்லில்

லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தேசியவாத மக்கள் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் என மொத்தம் நான்கு பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். இதன் மூலம் 60 தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபையில் பா.ஜ.,வின் பலம் 56 ஆக அதிகரித்து உள்ளது.
