ADDED : பிப் 21, 2024 02:52 AM
சுல்தான்பூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், காங்., - எம்.பி., ராகுலுக்கு ஜாமின் வழங்கி உத்தர பிரதேச மாநில சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில், 2018 சட்டசபை தேர்தலின் போது, மே 8ம் தேதி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்., - எம்.பி., ராகுல், 'கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், பா.ஜ., தலைவராக இருக்கிறார்' என தெரிவித்தார்.
இதற்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, அந்த சமயம், கட்சியின் தேசிய தலைவராக இருந்தார்.
ராகுலின் இந்த பேச்சுக்கு எதிராக, உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், பா.ஜ., நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர், 2018 ஆக., 4ல் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 18ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ராகுல் நேரில் ஆஜரானார். அவருக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி யோகேஷ் யாதவ் உத்தரவிட்டார்.

