UPDATED : மே 10, 2024 05:30 PM
ADDED : மே 10, 2024 02:22 PM

புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேட்டில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச்- 21 ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் பல முறை ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடினார். ஆனால் பலமுறை நிராகரிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி என கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்ற சுப்ரீம் கோர்ட் வரும் ஜூன் 1 ம் தேதி வரை ஜாமினில் விட உத்தரவிட்டனர்.கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது: ஒரு மாநிலத்தின் முதல்வராகவும், ஒரு தேசிய கட்சியின் தலைவராகவும் கெஜ்ரிவால் உள்ளார். அவர் மீது தீவிரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர் தண்டிக்கப்படவில்லை. சமூகத்திற்கு அவரால் ஆபத்து ஏதும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் ஜாமின் வழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 21 நாட்கள் அவர் சிறையில் இருந்தாலும் அல்லது வெளியில் இருந்தாலும் எந்த மாற்றம் ஏற்படாது.அவர் மீதான வழக்கு 2022 ஆக., மாதம் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்தாண்டு மார்ச் 21ல் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். வழக்குப்பதிவாகி ஒன்றரை ஆண்டுகள் அவர் வெளியில் இருந்துள்ளார். அவர் முன்பே கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும் அல்லது பிறகு கைது செய்திருக்க வேண்டும. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
டில்லியில் வரும் 25 ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் அவர் லோக்சபா தேர்தல் பிராசரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் பிரசாரம் சூடு பிடிக்கும். ஜூன் 2ம் தேதி மீண்டும் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.
ஜாமின் நகல், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஓரிரு நாளில் கெஜ்ரிவால் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர்கள் மகிழ்ச்சி
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கியது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியதை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி ஜனநாயகத்தை வலுப்படுத்தும். கெஜ்ரிவால் வெளியே வருவது நீதியை நிலைநாட்டுவதுடன், இண்டியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் எனக்கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியதை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனும் விரைவில் வெளியே வருவார் எனக்கூறியுள்ளது.