பைரேன் சிங் ராஜினாமா எதிரொலி; பாதுகாப்பு வளையத்தில் மணிப்பூர்
பைரேன் சிங் ராஜினாமா எதிரொலி; பாதுகாப்பு வளையத்தில் மணிப்பூர்
ADDED : பிப் 10, 2025 11:59 PM

இம்பால்: மணிப்பூரில், முதல்வராக இருந்த பைரேன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து, மாநிலம் முழுதும் அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி - கூகி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பைரேன் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, முதல்வர் பதவியை பா.ஜ., மூத்த தலைவர் பைரேன் சிங், 64, நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
இதை ஏற்ற கவர்னர் அஜய் குமார் பல்லா, காபந்து முதல்வராக தொடரும்படி அவரை கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், மணிப்பூர் காவல் துறையின் மூத்த அதிகாரி நேற்று கூறியதாவது:
பைரேன் சிங் ராஜினாமாவை தொடர்ந்து, மணிப்பூர் முழுதும் அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குண்டு துளைக்காத வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
வன்முறையை துாண்டக் கூடிய அரசியல் கட்சி தலைவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தலைநகர் இம்பாலில் போராட்டம் நடக்கலாம் என, எதிர்பார்க்கிறோம். அதை சமாளிக்க போலீசார் உள்ளனர்.
எந்தவொரு வன்முறையையும் கையாள, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், ஜாமர்கள் மற்றும் தேவையான ஆயுதங்களுடன், போலீசார் தயார் நிலையில் உள்ளனர். எனினும், நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மணிப்பூரில் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடம் அந்த கட்சியின் மூத்த தலைவர் சம்பித் பத்ரா நேற்று ஆலோசனை நடத்தினார்.