எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு பஜ்ரங் தள் அமைப்பு கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர் அசோக்கிற்கு பஜ்ரங் தள் அமைப்பு கண்டனம்
ADDED : பிப் 22, 2024 07:00 AM

மங்களூரு: 'உள்துறை அமைச்சராக இருந்தபோது, பஜ்ரங் தள் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டேன்' என, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கிற்கு கூறியதற்கு, பஜ்ரங் தள் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபையில், எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கடந்த வாரம் பேசுகையில், 'பா.ஜ., ஆட்சியில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது, மங்களூரில் 'பப்' ஒன்றில் புகுந்து, பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று, எனக்கு அழுத்தம் வந்தது. ஆனாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டேன்' என, கூறி இருந்தார்.
இதற்கு தட்சிண கன்னடா மாவட்ட, பஜ்ரங் தள் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் புனித் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். அவர் தனது முகநுால் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் அசோக், ஆர்.அசோக் இல்லை. ஏ. அசோக். அதாவது அட்ஜஸ்மென்ட் அசோக். அட்ஜஸ்மென்ட் அரசியல் செய்யும், அசோக்கிற்கு பஜ்ரங் தள் அமைப்பு பற்றி பேச, தகுதி இல்லை.
சித்தாந்தத்திற்காக போராடும், பஜ்ரங் தள் தொண்டர்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு, நீங்கள் பெரியவர் இல்லை. உங்களை போல நாங்கள், தனிப்பட்ட லாபத்திற்காக போராடவில்லை.
நீங்கள் என்றாவது ஒரு நாள், மங்களூரு வர நேரிடும் என்பதை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பஜ்ரங்தள் தொண்டர்கள் பற்றி, நீங்கள் கூறிய வார்த்தையை திரும்பப் பெறுங்கள். இல்லாவிட்டால் எங்கள் எதிர்ப்பை சந்திக்க தயாராகுங்கள்.
இவ்வாறு அதில் புனித் கூறியுள்ளார்.