ADDED : ஜன 09, 2025 03:48 AM

புல்தானா : மஹாராஷ்டிராவில், முடி உதிர்தல் பிரச்னையால் மூன்று கிராமங்களின் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், சிலருக்கு ஒரே வாரத்தில் தலை வழுக்கையானது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், போர்கான், கல்வாட், ஹிங்னா -என்ற மூன்று கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள், கடந்த சில நாட்களாக முடி உதிர்தல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சிலருக்கு, ஒரே வாரத்தில் தலையில் இருந்த அனைத்து முடிகளும் உதிர்ந்து வழுக்கையானது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள், சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
போர்கான், கல்வாட், ஹிங்னா -ஆகிய கிராமங்களுக்கு வந்த சுகாதாரத் துறையினர், கிராம மக்களின் தோல், முடி மற்றும் நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இது குறித்து சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முடி உதிர்தல் பிரச்னையால், மூன்று கிராமங்களில், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். அவர்களின் தோல், முடி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
'உரங்களால் நீரில் மாசு ஏற்பட்டிருக்கலாம். முடி உதிர்தலுக்கு நீர் மாசு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பரிசோதனையில் உண்மையான காரணம் தெரிய வரும்' என்றார்.

