ஆசியாவிலேயே முதல் முறையாக அமைந்த பல்லாரி கரடி சரணாலயம்
ஆசியாவிலேயே முதல் முறையாக அமைந்த பல்லாரி கரடி சரணாலயம்
ADDED : செப் 19, 2024 05:53 AM

வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் அறிந்திருக்கிறோம். கரடிகளுக்கு என்று தனி சரணாலம் இருப்பது தெரியுமா. ஆம், பல்லாரியில் 82.72 கி.மீ., பரப்பளவில் தரோஜி கரடி சரணாலயம் அமைந்துள்ளது. இது, 1994ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
விஜயநகர பேரரசர்கள் ஆண்ட ஹம்பி புராதன நகரத்தின் அருகில் உள்ளது. ஆசியாவிலேயே இங்கு தான் முதல் கரடி சரணாலயம் அமைக்கப்பட்டது. பாறை குகைகள், புதர்களுக்கு இடையே கரடிகள் வசிக்கின்றன.
பழங்கள், கிழங்குகள், தேன், பூச்சிகளை உண்ணுகின்றன. கரும்பு, சோள பயிர்களையும் உட்கொள்கிறது. சில நேரங்களில் பனை மரங்களில் ஏறி, பானைகளில் சேகரிக்கும் கள்ளையும் குடிக்கிறது. இரவில் உணவு தேடி அலையும். பகல் நேரத்தில் ஓய்வெடுக்கும்.
இங்கு, 120க்கும் அதிகமான கரடிகள் வாழ்கின்றன. இத்துடன், சிறுத்தை, நரி, முள்ளம்பன்றிகள், நட்சத்திர ஆமைகள், சிங்கவால் குரங்குகள், உடும்பு, மயில் உட்பட வெவ்வேறு வனவிலங்குகளும் வசிக்கின்றன.
கரடியின் ஆயுள் 40 - 50 ஆண்டுகள். குளிர் காலத்தில், 2 - 3 குட்டிகளை ஈன்றும். துங்கபத்ரா ஆற்றங்கரையில் கரடி சரணாலயம் அமைந்துள்ளது. குடும்பத்தினருடன் அரை நாள் கழிப்பதற்கு ஏற்ற இடம்.
வனவிலங்குகளை அதன் வாழ்விடத்தில் பார்ப்பது தனி அனுபவத்தை தரும். வனப்பகுதி ஆக்கிரமிப்பால் கரடிகள் கிராமங்களுக்குள் புகுந்து, மனிதர்களை தாக்குகிறது.
பொது மக்களுக்கு வனத்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமும் சரணாலயத்துக்கு செல்லும் போது, விலங்குகளுக்கு உணவு வழங்க கூடாது.
கரடி சரணாலயத்தை பார்த்து விட்டு, 15 கி.மீ., துாரத்தில் உள்ள ஹம்பி புராதன நகரத்தையும், ஹொஸ்பேட் அணையையும் பார்த்து மகிழலாம். ஒருநாள் கூடுதலாக தங்கினால், நிதானமாக பல இடங்களை சுற்றி பார்க்கலாம்.
வார நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும். வார இறுதி நாட்களில் கூட்டம் அலை மோதும். கூடுதல் தகவலுக்கு, http://www.bellary.nic.in/bearpark.htm என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
- நமது நிருபர் -