வீட்டை விற்க தந்தை விதித்த தடை: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பேச்சு
வீட்டை விற்க தந்தை விதித்த தடை: ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பேச்சு
ADDED : நவ 11, 2024 04:44 AM

புதுடில்லி: “மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில், ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பை என் தந்தை வாங்கினார். நான் ஓய்வு பெறும் வரை அதை விற்பதற்கு தடை விதித்திருந்தார்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட், சமீபத்தில் ஓய்வு பெற்றார். புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சஞ்சிவ் கன்னா இன்று பதவியேற்க உள்ளார். பிரிவு உபசார விழாவில், சந்திரசூட் பேசியதாவது:
புனேயில் ஒரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பை என் தந்தை வாங்கினார். 'நாம்தான் இங்கு தங்கவே போவதில்லையே, எதற்காக இதை வாங்க வேண்டும்' என்று கேட்டேன். அதற்கு, 'வழக்கறிஞராக அல்லது நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெறும் வரை, இந்த வீட்டை நான் விற்கக் கூடாது' என்று அவர் கூறியிருந்தார்.
அதற்கு அவர் கூறிய காரணம், 'பணியில் அல்லது தொழிலில் தார்மீக ஒருமைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்; அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நமக்கென ஒரு வீடு இருக்கிறது எனும்போது எதிலும் சமரசம் செய்ய மாட்டோம். அதனால், ஓய்வுபெறும் வரை இந்த வீட்டை விற்கக் கூடாது' என்று, எனக்கு அவர் சொல்லி கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில், என் குடும்பத்தாரும் பங்கேற்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. நான் குழந்தையாக இருந்தபோது, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவேன். அப்போதெல்லாம் இரவில் துாங்காமல் என்னை என் தாய் பார்த்து கொண்டார். மருந்து என்பது கங்கையை போன்றது, டாக்டர் என்பவர் கடவுள் நாராயணனை போன்றவர் என்று, அவர் எனக்கு பலமுறை கூறியுள்ளார்.
எனக்கு தனஞ்சய் என்று பெயரிட்டதற்கு, அதில் உள்ள தனம் என்பதை சொத்து குவிப்பதாக அல்லாமல், அறிவை, ஞானத்தை வளர்த்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்தார்.
மஹாராஷ்டிராவில் உள்ள பெரும்பாலான குடும்பங்களைப் போல, எங்கள் குடும்பத்திலும் என் தாயின் ராஜ்ஜியமே நடந்தது. மேற்கு வங்கத்திலும், குடும்பங்களில் பெண்களின் ராஜ்ஜியமே அதிகம் இருக்கும். என் மனைவி, வீட்டில் ராஜ்ஜியம் நடத்தினாலும், என் தீர்ப்புகள் மற்றும் வழக்குகளில் எப்போதும் தலையிட்டது கிடையாது. இதுவரை எந்த ஒரு நீதிபதிக்கும் கிடைக்காத ஒரு பெருமை எனக்கு கிடைத்துள்ளது.
சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்கள் என்னைப் பற்றியே வந்துள்ளன. இனி, அவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே. இவ்வாறு அவர் பேசினார்.