குடியிருப்புகள், வர்த்தக மையங்களில் பட்டாசு சேகரித்து வைக்க தடை
குடியிருப்புகள், வர்த்தக மையங்களில் பட்டாசு சேகரித்து வைக்க தடை
ADDED : அக் 23, 2024 08:54 PM
பெங்களூரு: குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் பட்டாசுகள் சேகரித்து வைப்பதற்கு, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு நகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
கடந்தாண்டு ஆனேக்கல்லின், அத்திப்பள்ளியில் பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு, 14 பேர் உயிரிழந்தனர். எனவே இம்முறை தீபாவளியில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களில் பட்டாசு சேகரித்து வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளில், மொத்த விலையில் பட்டாசு விற்க பெற்றிருந்த உரிமத்தைக் காட்டி, நடப்பாண்டுக்கும் உரிமம் பெற விண்ணப்பம் அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் வகுத்துள்ள விதிகளின்படி, பழைய உரிமம் அடிப்படையில், குடோன்களில் பட்டாசு சேகரித்து வைக்க அனுமதி பெற முடியாது.
பட்டாசு விற்க வியாபாரிகள் மனுத் தாக்கல் செய்தால், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அந்தந்த இடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்துகின்றனர். பாதுகாப்பான இடம் என, தெரிந்தால் மட்டுமே, அனுமதி கிடைக்கும்.
பாதுகாப்பை மனதில் கொண்டு, சம்பந்தப்பட்ட துறைகளிடம், அனுமதி பெறுவது கட்டாயம். பாதுகாப்பின்றி பட்டாசு சேகரித்து வைப்பதால், அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. ஒருவேளை தடை செய்யப்பட்ட இடங்களில், பட்டாசு சேகரித்து வைத்திருப்பது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

