ADDED : ஜன 24, 2025 07:06 AM
மைசூரு: மைசூரு குக்கரஹள்ளி ஏரிக்குள் சுற்றித்திரியும் ஏராளமான நாய்களுக்கு, வன விலங்கு ஆர்வலர்கள் உணவு அளித்து வந்தனர். இதனால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக, ஏரியை நிர்வகித்து வரும் மைசூரு பல்கலைக் கழகத்திடம் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஏரிக்குள் நாய்களுக்கு உணவளிப்பதற்கு தடை விதித்து, நுழைவு வாயிலில் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு வன விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் நாய்களுக்கு ஏரிக்கு வெளியே வன விலங்குகள் ஆர்வலர்கள் உணவு அளித்து வந்தனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா, கவர்னர் தாவர்சந்த கெலாட்டை தொடர்பு கொண்டு, நாய்களுக்கு உணவு அளிக்க விதிக்கப்பட்ட தடை, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவும். எனவே, இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் லோக்நாத் நேற்று கூறியதாவது:
ஏரிக்குள் நாய்களுக்கு உணவு அளிப்பதால், தாக்குவதாக நடைபயிற்சி மேற்கொள்வோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. தற்போது இந்த தடை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஏரிக்குள் நாய்களுக்கு உணவளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் விலஙகுகள் ஆர்வலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். ஏரிக்குள் இரண்டு இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்குவது குறித்து விவாதிக்கப்படும். இதனால் நாய்களை ஒரு பகுதியில் கட்டுப்படுத்துவதுடன், நடைப்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு தொந்தரவு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்துடன், நுழைவு வாயிலில் மாட்டப்பட்டிருந்த அறிவிப்பு பலகையும் அகற்றப்பட்டது.