பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை; ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு
பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை; ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு
UPDATED : அக் 07, 2025 10:20 AM
ADDED : அக் 07, 2025 02:59 AM

திருவனந்தபுரம்: மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் பலியானதை அடுத்து, கேரளாவில், 'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் பெதுல் மாவட்டங்களில், கடந்த மாத இறுதியில், 1 - 6 வயது வரையிலான 12 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. இதற்கு, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்டரா' இருமல் மருந்துகளே காரணம் என தெரியவந்தது. ராஜஸ்தானில், இதேபோல் இரு குழந்தைகள்உயிரிழந்தன. இதையடுத்து, மருந்து கலப்பட விவகாரத்தில், மருந்து நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்ட அரசு கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
பரிந்துரை
சீட்டு மத்திய பிரதேசத்தில், 'கோல்ட்ரிப்' மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். இரண்டு மருந்து ஆய்வாளர்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை இயக்குநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இரு மாநிலங்களிலும், 'கோல்ட்ரிப்' மருந்தை, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவிலும், 'கோல்ட்ரிப்' மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் தரக் கூடாது என, மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. ம.பி., குழந்தைகள் இறப்பை அடுத்து, கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், டாக்டர்கள் உள்ளிட்டோர் பங்கற்ற உயர்மட்ட கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: கேரளாவில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் யாரும் இறக்கவில்லை. இருப்பினும், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை, 52 இருமல் மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட, 'கோல்ட்ரிப்' மருந்தை தயாரித்த நிறுவனத்தின் பிற மருந்துகளையும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் இருமல் மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, குழந்தைகளின் இருமல் மருந்து பயன்பாடு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடியும். அதேசமயம், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி, எந்த மருந்தும் வழங்கக் கூடாது என, மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான மருந்துகள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுவதால், ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் மருந்து மற்றொரு குழந்தைக்கு வழங்கப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கிய சீட்டுக்கு, மீண்டும் மீண்டும் மருந்து வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில், மாநிலம் முழுதும் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.