நாடு திரும்ப கட்சி மீதான தடை நீக்கப்பட வேண்டும்: வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா நிபந்தனை
நாடு திரும்ப கட்சி மீதான தடை நீக்கப்பட வேண்டும்: வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனா நிபந்தனை
ADDED : நவ 12, 2025 11:29 PM

கொல்கட்டா: ''ஜனநாயகத்தில் பங்கெடுப்பது தான் நாடு திரும்ப நான் விதிக்கும் முக்கியமான நிபந்தனை,'' என, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், தன் அவாமி லீக் கட்சி மீதான தடையை நீக்க வேண்டும். நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால அரசு நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த 1971ம் ஆண்டு நடந்த அந்நாட்டு விடுதலை போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில், 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 2018ல் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், இடஒதுக்கீடு நிறுத்தப்பட்டது.
சுதந்திரமான தேர்தல் பின்னர் கடந்த, 2024ல் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப் போவதாக அரசு அறிவித்ததால், மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
எதிர்க்கட்சியினர் அவர்களை துாண்டுவதாக ஆளும் அவாமி லீக் கட்சியின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினார்.
அதற்குள் போராட்டம் வன்முறையாக மாறி, ஷேக் ஹசீனாவின் வீடு, அலுவலகம் சூறையாடப்பட்டன.
இதனால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆக., 5ம் தேதி வங்கதேசத்தில் இருந்து வெளியேறி, நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.
அதன் பின், அமைதியை நிலைநாட்டும் நோக்கில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில், ''மீண்டும் வங்கதேசம் திரும்ப வேண்டுமெனில், தன் நிபந்தனைகளை இடைக்கால அரசு ஏற்க வேண்டும்,'' என ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
வங்கதேசம் திரும்ப வேண்டுமெனில், மிக முக்கியமான நிபந்தனை ஒன்று இருக்கிறது. வங்கதேச மக்களுக்கும் தேவையான நிபந்தனை. அது ஜனநாயகத்தில் பங்கெடுப்பது. தவிர, அவாமி லீக் கட்சி மீதான தடை விலக்கப்பட வேண்டும்.
நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இடைக்கால அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே, மீண்டும் தாய்நாடு திரும்புவது சாத்தியமாகும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் தேர்தலை புறக்கணிக்க சொன்னதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது. அவாமி லீக் கட்சியின் பங்கேற்பு இல்லாமல் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலும் சட்டப்பூர்வமானதாக இருக்காது.
கோடிக்கணக்கான மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். எங்கள் கட்சி மீது முட்டாள்தனமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த தடை நீங்கும் என நம்புகிறேன்.
வங்கதேசத்தின் மிக முக்கியமான நட்பு நாடாக இந்தியா உள்ளது. ஆனால், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இந்தியாவுடனான நட்புறவை முறித்துக்கொள்ள பார்க்கிறது. இது சொந்த நாட்டையே அழிக்கும் முட்டாள்தனமான செயல்.
இடைக்கால அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வைத்து, வங்கதேச மக்களும் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு வர வேண்டாம். உண்மை அதுவல்ல. இந்தியா எப்போதுமே எங்களுக்கு நட்பு நாடு.
இந்தியாவுக்கு நன்றி உலக நாடுகளின் கண்காணிப்புடன், சர்வதேச நீதிமன்றத்தில் எனக்கு எதிரான வழக்கை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால், யூனுஸ் அரசு அதை விரும்பவில்லை.
ஏனெனில், வழக்கு அவர்கள் நினைக்கும்படி ஒருதலைபட்சமாக நடக்காது. அவர்களுக்கு தோல்வியே கிடைக்கும். இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் யூனுஸ் வழக்கை நடத்த விடமாட்டார்.
தற்போதைக்கு எனக்கு தஞ்சம் அளித்த இந்திய அரசுக்கும், அன்பான விருந்தோம்பல் அளிக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

