ADDED : நவ 11, 2024 06:09 AM

ஹாசன் : கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிபுரா என்ற பகுதியில், அரசு செவிலியர் கல்லுாரி இயங்கி வருகிறது.
இந்த கல்லுாரி, ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லுாரியின் ஒரு பகுதி. இந்த கல்லுாரியில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 40 மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த மாணவர்கள் நீண்ட தாடி வைத்திருந்தனர். அதை 'ட்ரிம்' செய்து வரும்படி கல்லுாரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், இது தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் மாணவர் சங்கத்தில் புகார் அளித்தனர்.
வருகை பதிவு பாதிப்பு
இது குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு மாணவர் சங்கம் கடிதம் எழுதியது. அதில், 'கல்லுாரி வளாகத்துக்குள் நுழைய தாடியை கத்தரிக்க வேண்டும் என, மாணவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது வருகைப்பதிவு பாதிக்கப்படுகிறது.
'இது போன்ற செயல்கள் இந்த மாணவர்களின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், ஒதுக்கப்பட்ட சூழ்நிலையை உருவாக்குகின்றன' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாணவர் சங்கம் தலையிட்டதை அடுத்து, செவிலியர் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் தாடி வைக்க அனுமதிக்கப்பட்டனர்.
சுமுக தீர்வு
ஹாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் இயக்குனர் டாக்டர் ராஜண்ணா கூறியதாவது: ஹோலேநரசிபுராவில் உள்ள செவிலியர் கல்லுாரியில் மாணவர்களில் சிலர், சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வருவதில்லை என்றும், நீண்ட தாடி வைத்திருப்பதாகவும் எங்களுக்கு புகார்கள் வந்தன.
நர்சிங் படிப்பு என்பதால், ஆய்வகத்துக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். தாடியுடன் வகுப்புகளில் பங்கேற்றால் ஏதாவது பிரச்னை ஏற்படும். இதனால், அனைத்து மாணவர்களையும் தாடியை எடுக்கும்படி உத்தரவிட்டோம். குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் கூறவில்லை.
இதை தவறாக புரிந்து கொண்ட மாணவர்கள், இது தொடர்பாக, மாணவர் சங்கத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் எங்கள் கவனத்துக்கு வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து பேசினோம்.
அப்போது, கல்லுாரிக்கு ஆடை கட்டுப்பாட்டுடன் வருவதாகவும், தாடியை ட்ரிம் செய்வதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர். இந்த பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.