விநாயகர் சிலை கரைப்புக்கு காவிரி நீரை பயன்படுத்த தடை! : மீறினால் அபராதம் என குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை
விநாயகர் சிலை கரைப்புக்கு காவிரி நீரை பயன்படுத்த தடை! : மீறினால் அபராதம் என குடிநீர் வடிகால் வாரியம் எச்சரிக்கை
ADDED : செப் 07, 2024 07:42 AM
பெங்களூரு: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பெங்களூரில் விநாயகர் சிலையை கரைக்க, காவிரி நீரைப் பயன்படுத்த, குடிநீர் வடிகால் வாரியம் தடை விதித்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கும்படியும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் காவிரி தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போனதால், காவிரி தண்ணீர் வழங்கும் கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம் குறைந்து போனது. இதனால் பெங்களூரு நகரில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பணம் கொடுத்து டேங்கர் தண்ணீர் வாங்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டனர். தண்ணீருக்காக அல்லோலப்பட்டனர்.
கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அனைத்து அணைகளும் நிரம்பின.
கே.ஆர்.எஸ்., அணை நிரம்பியதால், பெங்களூருவுக்கு இருந்த குடிநீர்த் தட்டுப்பாடு கண்டம் நீங்கியது.
தண்ணீர் இல்லாதபோது, பார்த்து, பார்த்து செலவழித்த மக்கள், தற்போது தண்ணீர் கிடைத்துவிட்டதால், தாராளமாக பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை. இந்த மாதம் முழுதும் கொண்டாட்டங்கள் இருக்கும். வீடுகள், தெருக்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்படும்.
இந்நிலையில், விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு காவிரி நீரை பயன்படுத்தக் கூடாது என, பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால், அபராதம் விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, காவிரி நீரை குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற பணிகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அதே பாணி கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குடிநீர் வீணாவதைத் தடுப்பதற்காகவே இந்த நடைமுறை கடைபிடிப்பதற்கு, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் இந்த முடிவு எடுத்துஉள்ளது.