கர்நாடகாவில் இன்று 'பந்த்'; கர்நாடகா - தமிழகத்திற்கு இடையே போக்குவரத்தில் பாதிப்பு?
கர்நாடகாவில் இன்று 'பந்த்'; கர்நாடகா - தமிழகத்திற்கு இடையே போக்குவரத்தில் பாதிப்பு?
ADDED : மார் 22, 2025 05:47 AM

ஓசூர்: கர்நாடக மாநிலத்தில், இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையில், தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருக்கு, நேற்றிரவு வரை பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன.
கர்நாடகாவில், எம்.இ.எஸ்., என்ற மஹாராஷ்டிர ஏகிகரன் சமிதி அமைப்பை தடை செய்ய வேண்டும். கலசா - பந்துரி மகாதாய் யோஜனா திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும்.
வலியுறுத்தல்
வட கர்நாடகம் வளர்ச்சி அடைய வேண்டும். மாநில எல்லைப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
பெலகாவி காப்பாற்றப்பட வேண்டும். சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும். கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசை கண்டித்தும், சில கன்னட அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளன.
அதனால், கர்நாடகா - தமிழகம் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சேலம், விழுப்புரம் உட்பட இதர கோட்டங்களை சேர்ந்த அரசு பஸ்கள், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், தனியார் பஸ்கள் என, 700க்கும் மேற்பட்ட பஸ்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தினமும் சென்று வருகின்றன.
அதேபோல, அம்மாநிலஅரசு பஸ்களும், தமிழக எல்லையான ஓசூருக்கு இயக்கப்படுகின்றன.
நேற்று இரவு வரை, இரு மாநிலங்களுக்கு இடையே அரசு பஸ் போக்குவரத்து மற்றும் இதர வாகனபோக்குவரத்து சீராக இருந்தது. கர்நாடகாவில், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. அதனால், மெட்ரோ, பஸ் சேவை மற்றும் கடைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
இருந்தாலும் இன்று காலை, கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, அதிகாலை முதல் பஸ்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என, தெரிகிறது.
பெரும்பாலான கன்னட அமைப்புகள்,முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுதரவில்லை. அதனால்,கர்நாடகா - தமிழகத்திற்கு இடையே போக்குவரத்தில் பாதிப்பு இருக்காது என்று, போலீசார் தெரிவித்தனர்.