பிரதமர் வருகையால் பிரபலமான பந்திப்பூர்: 2023ல் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய்
பிரதமர் வருகையால் பிரபலமான பந்திப்பூர்: 2023ல் கூடுதலாக ரூ.4 கோடி வருவாய்
UPDATED : ஜன 09, 2024 03:09 AM
ADDED : ஜன 09, 2024 12:19 AM

சாம்ராஜ் நகர்: பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூருக்கு வந்து சென்ற பின், இங்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில், கூடுதலாக 4 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், குண்டுலுபேட்டின், பந்திப்பூர் வனப்பகுதி மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
நாட்டின் பிரபலமான புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தின், 50வது ஆண்டு கொண்டாட்டம், சில மாதங்களுக்கு முன் இங்கு நடந்தது.
இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். வனப் பகுதியில் ஒன்றரை மணி நேரம், 'சபாரி' சென்றார்.
பிரதமர் வந்து சென்ற பின், பந்திப்பூருக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. வருவாயும் முன்பை விட அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், விலங்குகள், இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
இதற்கு முன் ஆண்டுதோறும், 8 கோடி ரூபாய் வருவாய் வந்தது. ஆனால், பிரதமர் வந்து சென்றதை அடுத்து, 2023ல், 12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
வருவாயில், கர்நாடகாவின் அனைத்து சபாரி பகுதி களுடன் ஒப்பிட்டால், பந்திப்பூர் முதல் இடத்தில் உள்ளது. சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சபாரி வாகனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வாகனங்களை வனத்துறை வாங்கியிருந்தாலும், அதிகரித்து வரும் சுற்றுலா பயணியருக்கு அது போதுமானதாக இல்லை.