வங்கதேசத்தின் சட்ட விரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
வங்கதேசத்தின் சட்ட விரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : பிப் 06, 2025 12:40 AM

புதுடில்லி: சர்வதேச எல்லையில் வங்கதேசம் சார்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊடுருவல் அதிகரிப்பு
அண்டை நாடான வங்கதேசத்துடன், நம் நாடு, 4,096 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் மேற்கு வங்கத்தில் மட்டும், 2,217 கி.மீ., துாரம் அடங்கும்.
கடந்த 2024 ஆகஸ்டில், வங்கதேச பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்ததை அடுத்து, அந்நாட்டில் இருந்து எல்லை வழியாக நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவுவது அதிகரித்தபடி உள்ளது.
இதனால் இந்தியா - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள இந்தியா - வங்கதேச எல்லை பகுதிகளில், 2024ல் மட்டும், 80க்கும் அதிகமான முறை, வங்கதேச பாதுகாப்பு படையினர் சட்ட விரோத கட்டுமானங்களை கட்ட முயற்சித்தனர்.
இதை நம் எல்லை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். மேற்கு வங்கத்தின் தக் ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தின் மாலிக்பூர் என்ற கிராமம், இந்தியா - வங்கதேச எல்லையில் உள்ளது.
தடுத்து நிறுத்த வேண்டும்
இந்த கிராமத்திற்குள், சமீபத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த வங்கதேசத்தினர், எல்லை பாதுகாப்பு படையினரை தாக்கினர். இதில் நம் வீரர் ஒருவர் காயமடைந்தார். தற்காப்புக்காக நம் படையினர் துப்பாக்கியால் சுட்ட போது, வங்கதேச எல்லைக்குள் அவர்கள் ஓடிவிட்டனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில், வங்கதேசம் சார்பில் மேற்கொள்ளப்படும் சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி, எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எல்லை பட்டாலியன்களின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த அதிகாரிகள், முக்கிய பகுதிகளுக்கு தொடர்ந்து சென்று, தேவையான இடங்களில் முகாமிட வேண்டும். நம் நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.