திரிபுரா மாநில அரசுக்கு ரூ.200 கோடி மின் கட்டண பாக்கி வைத்த வங்கதேசம்
திரிபுரா மாநில அரசுக்கு ரூ.200 கோடி மின் கட்டண பாக்கி வைத்த வங்கதேசம்
ADDED : டிச 24, 2024 03:39 AM
அகர்தலா : திரிபுரா மாநிலம் அளித்துள்ள மின்சாரத்துக்கு, 200 கோடி ரூபாயை வங்கதேசம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது என, மாநில முதல்வர் மாணிக் சாஹா குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
கடந்த 2016ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நம் அண்டை நாடான வங்கதேசத்துக்கு திரிபுரா மாநில அரசு மின்சாரம் வினியோகித்து வருகிறது. கடந்த 2016 மார்ச் மாதத்தில் இருந்து இவ்வாறு மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தால், வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டது.
பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையில் தற்காலிக அரசு அமைந்துள்ளது.
இந்நிலையில், வங்கதேச அரசு, 200 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாக முதல்வர் மாணிக் சாஹா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
இருநாட்டு அரசுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மின்சாரத்தை வழங்கி வருகிறோம். ஆனால், 200 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இருப்பினும், மின்சார வினியோகத்தை நிறுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
நிலுவை தொகையை வங்கதேச அரசு விரைவில் அளிக்கும் என, எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தொழிலதிபர் கவுதம் அதானியின் அதானி பவர் நிறுவனமும், வங்கதேசத்துக்கு மின்சாரத்தை விற்கிறது. வங்கதேச அரசு, 6,8-08 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதால், மின் வினியோகத்தை அதானி நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது.