ADDED : செப் 18, 2024 05:38 AM

புதுடில்லி : “வங்கதேசத்தில் நடப்பது உள்நாட்டு விவகாரம். அவர்களுடனான உறவு நிலையாக தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்,” என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்கள் புரட்சி வெடித்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், நாட்டை விட்டு வெளியேறினார்.
நம் அரசின் ஒப்புதலுடன் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் விமானப்படை தளத்துக்கு வந்திறங்கிய அவர், நம் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். இதை தொடர்ந்து, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது: வங்கதேசத்தில் நடந்தவை முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். நம் அண்டை நாட்டுடனான உறவை நிலையாக பராமரிக்கவே நாங்கள் விரும்புகிறோம். வர்த்தக உறவு, மக்கள் இடையிலான உறவு சீராக உள்ளன. இது அப்படியே தொடர வேண்டும் என்பதே விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.