மாற்றுத்துணி கூட இல்லை: உடுத்திய துணியுடன் வெறும் கையுடன் வந்திறங்கிய ஹசீனா
மாற்றுத்துணி கூட இல்லை: உடுத்திய துணியுடன் வெறும் கையுடன் வந்திறங்கிய ஹசீனா
UPDATED : ஆக 08, 2024 10:57 AM
ADDED : ஆக 08, 2024 07:34 AM

டாக்கா: வன்முறை கும்பலிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், மாற்றுத்துணி கூட இல்லாமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்துள்ளார் ஷேக் ஹசீனா. அவருக்கு இந்திய அரசு சார்பில் தகுந்த உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தால் கடும் வன்முறை வெடித்து ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வேறு வழியில்லாத நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறினார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற, 45 நிமிடங்கள் மட்டுமே ராணுவ தளபதி அவகாசம் கொடுத்திருந்தார். அந்த நேரத்தை பயன்படுத்திய அவர், தனது சகோதரி ஷேக் ரெஹானா மற்றும் நெருங்கிய உதவியாளர்களுடன் ஒரு ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு வந்து இறங்கினார்.
ஹசீனாவுக்கு நேர்ந்த நெருக்கடி!
எந்த நேரத்திலும் வன்முறை கும்பல் தன் இல்லத்தில் புகுந்து விடும் ஆபத்தில் இருந்து தப்பிக்க, அவசரமாக, நாட்டை விட்டு ஓடி வந்த ஹசீனா, உயிர் தப்பினால் போதும் என்ற எண்ணத்தில், துணிமணிகள், அன்றாட தேவைக்கான பொருட்கள் என எதையும் எடுக்காமல், உடுத்திய துணியோடு இந்தியா வந்தார்.
காஸியாபாத் ஹின்டன் விமான தளத்தில் வந்திறங்கிய அவருக்கும், அவரது குடும்பத்தினர், உதவியாளர்களுக்கும் மாற்றுத்துணி கூட இல்லை. அவற்றை வாங்கித் தர இந்திய அதிகாரிகள் தான் உதவியுள்ளனர். பிரதமர் பதவியில் இருந்த, ஷேக் ஹசீனாவுக்கு, இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது தொடர்பாக, அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடைக்கலம்
ஷேக் ஹசீனா வேறு ஏதேனும் நாட்டில் அடைக்கலம் பெறும் வரை இந்தியா அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.