ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் வங்கதேச அரசு உறுதி
ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு: பிரதமர் மோடியிடம் வங்கதேச அரசு உறுதி
ADDED : ஆக 16, 2024 05:11 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதிமொழி அளித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிந்துக்களின் வீடுகள், சொத்துகள், கோவில்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் பேரணி நடத்தினர்.
நேற்று டில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, '' வங்கதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் கவலை கொண்டு உள்ளனர் '' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முகமது யூனுஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஜனநாயகம், ஸ்திரமான, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும். வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவர் உறுதிமொழி அளித்தார். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.