ADDED : ஏப் 30, 2025 07:42 AM
ஆமதாபாத்: குஜராத்தில், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, ஆமதாபாதில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக குடியேறிய, 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை சமீபத்தில் கைது செய்தனர்.
இங்குள்ள சந்தோலா ஏரி பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2,000 வீடுகளில் இவர்கள் வசித்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீடுகளை இடிக்கும் பணியில் ஆமதாபாத் மாநகராட்சி நேற்று ஈடுபட்டது. இதற்காக 50 குழுக்கள் பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று அப்பகுதியில் இருந்த வீடுகளை இடித்து தள்ளினர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பாதுகாப்புக்காக 2,000 போலீசார் மற்றும் மாநில ரிசர்வ் போலீசைச் சேர்ந்த 20 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டனர். இரவுக்குள் பெரும்பாலான வீடுகள் அகற்றப்பட்டன.

