மேலும் ஒரு ஹிந்து துறவி கைது வங்கதேச போலீசார் நடவடிக்கை
மேலும் ஒரு ஹிந்து துறவி கைது வங்கதேச போலீசார் நடவடிக்கை
ADDED : டிச 01, 2024 05:04 AM

புதுடில்லி: வங்கதேசத்தில், 'இஸ்கான்' அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் உள்ள, 'சம்மிலிதா சனாதனி ஜோதே' என்ற ஹிந்து அமைப்பின் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர், 'இஸ்கான்' எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி.
கடந்த அக்., 30ல், வங்கதேசத்தில் ஹிந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில், வங்கதேச தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாஸ் மீது, தேசத்துரோகம் உட்பட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்துக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், 'இஸ்கான்' அமைப்பைச் சேர்ந்த ஷ்யாம் தாஸ் பிரபு என்ற துறவியையும், வங்கதேச போலீசார் நேற்று கைது செய்ததாக, அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள சின்மோய் கிருஷ்ண தாசை சந்திக்க சென்றபோது, ஷ்யாம் தாஸ் பிரபு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹொசபலே நேற்று வெளியிட்ட அறிக்கை:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்தும் தாக்குதல், கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. இந்த செயலை ஆர்.எஸ்.எஸ்., கடுமையாக கண்டிக்கிறது.
இதை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, வங்கதேச அரசு மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. வங்கதேச ஹிந்துக்கள் தற்காப்புக்காக ஜனநாயக வழியில் எழுப்பிய குரலை அடக்கி ஒடுக்கியுள்ளனர்.
அமைதியான போராட்டங்கள் வாயிலாக ஹிந்துக்களை வழிநடத்தி வந்த இஸ்கான் அமைப்பின் முன்னாள் நிர்வாகி சின்மோய் கிருஷ்ண தாஸை வங்கதேச அரசு சிறையில் அடைத்திருப்பது அநியாயமானது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சின்மோய் கிருஷ்ண தாஸை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களுக்கு எதிரான வன்முறையை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.