மே.வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேச மாணவர் பரபரப்பு! திரிணமுல் காங்., - பா.ஜ., மீண்டும் வார்த்தை மோதல்
மே.வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேச மாணவர் பரபரப்பு! திரிணமுல் காங்., - பா.ஜ., மீண்டும் வார்த்தை மோதல்
UPDATED : ஜூன் 10, 2025 01:33 AM
ADDED : ஜூன் 10, 2025 01:18 AM

வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் முக்கியமானவரான நியூட்டன் தாஸ் என்பவரின் பெயர், மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அம்மாநில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. இது தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே மீண்டும் வார்த்தை மோதல் துவங்கி உள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு ஏப்ரலில், சட்டசபை தேர்தல் நடக்கிறது. 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக உள்ள மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார். இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.,வும் பணியாற்றி வருகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், மேற்கு வங்கம் சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த மாநில அரசியலை பொறுத்தவரை, சட்ட விரோத ஊடுருவல் பிரச்னை தவிர்க்க முடியாதது.
மேற்கு வங்கத்தில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து வங்கதேசத்தவர் சட்ட விரோதமாக ஊடுருவுவதாகவும், அவர்களுக்கு திரிணமுல் காங்., அடைக்கலம் கொடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வருவதாகவும் எதிர்க்கட்சியான பா.ஜ., தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறது.
புகலிடம்
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா போன்றோர், மேற்கு வங்கத்துக்கு வரும் போதெல்லாம் சட்ட விரோத ஊடுருவல் குறித்து பேசுவர். தேர்தல் ஆதாயத்துக்காக ஊடுருவல்காரர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அடைக்க கொடுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுவர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்களில், மிகவும் முக்கியமானவர் நியூட்டன் தாஸ்.
இவரது பெயர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள காக்த்விப் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது.
இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'சட்ட விரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தவர்களுக்கு திரிணமுல் காங்., அரசு புகலிடம் கொடுப்பதாக துவக்கத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வருகிறோம். அது, நியூட்டன் தாஸ் விவகாரத்தில் உறுதியாகி உள்ளது.
'இவரைப்போல இன்னும் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர் என தெரியவில்லை. சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு மம்தா அரசு அடைக்கலம் கொடுப்பது தற்போது நிரூபணமாகிறது' என்றனர்.
இதை திட்டவட்டமாக மறுத்த திரிணமுல் காங்., 'சர்வதேச எல்லையை நாங்கள் பாதுகாக்கவில்லை. மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை பாதுகாக்கிறது' என்றது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நியூட்டன் தாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
பனிப்போர்
அதில், 'கடந்த, 2014 முதல் காக்த்விப் தொகுதியில் வசிக்கிறேன்; வாக்காளராகவும் உள்ளேன். 2024 ஜூலையில், என் மூதாதையரின் நில விவகாரங்களுக்காக, வங்கதேசத்துக்கு சென்றேன். அந்த சமயத்தில் போராட்டம் நடந்தது' என குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது -என தெரியவில்லை. மேலும், நியூட்டன் தாஸ் தற்போது மேற்கு வங்கத்தில் இருக்கிறாரா அல்லது வங்கதேசத்தில் இருக்கிறாரா என தெரியவில்லை.
சட்ட விரோத ஊடுருவல் தொடர்பாக ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சி பா.ஜ., இடையே ஏற்கனவே பனிப்போர் நிலவி வரும் நிலையில், நியூட்டன் தாஸ் விவகாரம் மீண்டும் வார்த்தை மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது. இது வரும் சட்டசபை தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என, கருதப்படுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -