ADDED : ஜன 10, 2025 11:22 PM

மங்களூரு: மங்களூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக வசித்த, வங்கதேச வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு அருகே முக்கா கிராமத்தில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த வாலிபர் சட்டவிரோதமாக வசிப்பதாக, உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. அந்த வாலிபரை பற்றி, மங்களூரு ரூரல் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
வாலிபரின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்தனர். முக்கா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த வாலிபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் அனுருல் ஷேக், 25 என்பது தெரிந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய அவர், இந்தியா - வங்கதேச நாடுகளின் லால்கோல் எல்லை வழியாக, மேற்கு வங்கத்திற்குள் நுழைந்துள்ளார்.
முர்ஜிதாபாத்தில் தங்கி இருந்து கட்டட வேலை செய்துள்ளார். பின், மங்களூரு வந்து கட்டட வேலை செய்தது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து போலி ஆதார் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.
அனுருல் ஷேக்கை பெங்களூரில் தடுப்பு காவலில் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

