ADDED : ஜன 02, 2025 02:13 AM
குவஹாத்தி,''வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், அசாம் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர்,'' என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் நம் அண்டை நாடான வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்துஉள்ளது.
இதனால் வங்கதேசத்தில் இருந்து அசாம் எல்லை வழியாக, நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக பலர் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இவர்களை அசாம் அரசு தடுத்து திருப்பி அனுப்பி வருகிறது.
இந்நிலையில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பின், அங்கு உள்ளவர்கள் நம் நாட்டுக்குள் ஊடுருவுவது பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து மாதங்களில், தினமும் 20 முதல் 30 பேர் அசாம் மற்றும் திரிபுராவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றனர்.
வங்கதேசத்தில் உள்ள அரசியல் நிலைமை அந்நாட்டின் ஜவுளித் தொழிலின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
இதனால், அந்த தொழிலில் பணியாற்றிய அந்நாட்டின் பெரும்பான்மையினரான முஸ்லிம் தொழிலாளர்கள், தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு செல்ல, நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். குறைந்த கூலிக்கு தொழிலாளர்களைப் பெற, இந்த ஊடுருவல்களை சிலர் துாண்டி விடுகின்றனர்.
நாங்கள் இந்த ஊடுருவல்காரர்களை கைது செய்யாமல், சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வருகிறோம்.
வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மையினர் வன்முறைகளை எதிர்கொண்ட போதிலும், கடந்த ஐந்து மாதங்களில் வங்கதேச ஹிந்துக்கள் யாரும் அசாமுக்கு வரவில்லை. ஹிந்துக்கள் தேச பக்தி உடையவர்களாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.