ADDED : நவ 09, 2024 11:04 PM
மங்களூரு: மனைவி, மகனை கொலை செய்த கணவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தட்சிணகன்னடா மாவட்டம், முல்கியின் பக்ஷிகெரே கிராமத்தில் வசித்தவர் கார்த்திக் பட், 32. இவரது மனைவி பிரியங்கா, 28. தம்பதிக்கு ஹிருதய், 4, என்ற ஆண் குழந்தை இருந்தது. கார்த்திக் பட், கூட்டுறவு வங்கியில் பணியாற்றினார்.
இவரது தந்தை ஜனார்த்தன பட், பக்ஷிகெரே சந்திப்பில் ஹோட்டல் நடத்துகிறார். பிரியங்காவுக்கு மாமனார், மாமியாருடன் ஒத்துப்போகவில்லை. அதே வீட்டில் கார்த்திக் பட், தன் மனைவி, மகனுடன் தனி அறையில் வசித்தார். தாய், தந்தையுடன் பேசுவதில்லை. நேற்று முன் தினம் காலை, இவரது தந்தை, வழக்கம் போன்று ஹோட்டலுக்கு சென்றிருந்தார். அதற்காகவே காத்திருந்த கார்த்திக் பட், தன் மனைவி, மகனை கத்தியால் குத்திக் கொலை செய்து, உடல்களை அங்கேயே போட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
முல்கியின், பெள்ளாயர் அருகில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அடையாளம் தெரியாத ஆண் உடல், தண்டவாளத்தில் கிடப்பது குறித்து அறிந்த போலீசார் அங்கு வந்தனர். உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது, கார்த்திக் பட் என்பதை கண்டுபிடித்தனர்.
நேற்று மதியம், அவரது வீட்டு முகவரியை கண்டுபிடித்து, அங்கு சென்றனர். அவரது தந்தையிடம் விஷயத்தை கூறினர். அவரும் மகன் வசித்த அறைக்கதவை திறந்து பார்த்தபோது தான், மருமகளும், பேரனும் கொலையாகி கிடந்தது தெரிந்தது.
நேற்று முன் தினம் காலையிலேயே கொலை நடந்திருந்தும், ஜனார்த்தன பட்டுக்கு தெரியவில்லை. அறைக்கதவு மூடியிருந்ததால், மகனும், மருமகளும் உள்ளே இருக்கக் கூடும் என, நினைத்தார். நேற்று காலை ஹோட்டலுக்கு புறப்படும்போதும், அப்படித்தான் நினைத்தார்.
போலீசார் வீட்டுக்கு வந்த பின்னர்தான், அவருக்கு விஷயம் தெரிந்தது.
குடும்ப பிரச்னை காரணமாக, கார்த்திக் பட் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.