கேரளாவில் வங்கி ஊழியரிடம் பணம் பறித்த வழக்கு; குற்றவாளி மறைத்து வைத்த ரூ.39 லட்சம் கண்டுபிடிப்பு
கேரளாவில் வங்கி ஊழியரிடம் பணம் பறித்த வழக்கு; குற்றவாளி மறைத்து வைத்த ரூ.39 லட்சம் கண்டுபிடிப்பு
ADDED : ஜூலை 15, 2025 10:58 PM

பாலக்காடு; கேரளாவில், தனியார் வங்கி ஊழியரிடம் பணம் பறித்துச்சென்ற வழக்கில், குற்றவாளி மறைத்து வைத்த 39 லட்சம் ரூபாயை போலீசார் கண்டுபிடித்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டுகரை பகுதியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த ஷிபின் லால் 45, என்பவர் வங்கி மேலாளரை சந்தித்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வாங்கிய, 40 லட்சம் ரூபாய் கடனை, வங்கிக்கு 'டேக் ஓவர்' செய்து தர வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்காக போலியாக தயாரித்த தனியார் நிதி நிறுவனத்தின் ரசீதும் அவர் காண்பித்துள்ளார். அதை நம்பி ஒப்புக்கொண்ட மேலாளர், வங்கி ஊழியர் அரவிந்தனிடம் தேவையான நடவடிக்கை செய்து அவருக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து ஷிபின் லாலுடன் சென்ற, வங்கி ஊழியர் அரவிந்திடம் உள்ள ரூ. 40 லட்சத்தை பறித்து ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பந்தீரக்காவு போலீசார், எஸ்.பி., நாராயணனின் அறிவுரையின்படி சிறப்பு படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தி நடத்திய விசாரணையில், ஷிபின் லால், பாலக்காடு பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கடந்த 13ம் தேதி பாலக்காடு சென்று அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிச் சென்ற 40 லட்சம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே போலீசார் பறிமுதல் செய்ய முடிந்தது.
பலமுறை ஷிபின் லாலிடம் விசாரித்தும், மீதி பணம் குறித்தான தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மூன்றாவது முறை நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்து, ஷிபின் லாலை போலீசார் கஸ்டடி எடுத்தனர்.
போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பணத்தை அவரது வீட்டின் 500 மீட்டர் தொலைவில் உள்ள குப்பைத்தொட்டி அருகே குழி தோண்டி, பிளாஸ்டிக் கவருக்குள் போட்டு மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அப்பகுதிக்கு அவரையும் அழைத்து சென்று நடத்திய சோதனையில், 39 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.