வங்கி ஊழியர்கள் கன்னடம் கற்கணும் ஆணைய தலைவர் 3 மாதம் கெடு
வங்கி ஊழியர்கள் கன்னடம் கற்கணும் ஆணைய தலைவர் 3 மாதம் கெடு
ADDED : பிப் 18, 2025 05:56 AM

மைசூரு,: ''வங்கியில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர், மூன்று மாதத்திற்குள் கன்னடம் கற்றுக் கொண்டு பேச வேண்டும்,'' என கன்னட மேம்பாட்டு ஆணையத் தலைவர் புருஷோத்தம் பிலிமலே கூறினார்.
கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் ஆலோசனை கூட்டம், மைசூரு மாவட்ட கலெக்டர் அலுவலக ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில், கன்னட மேம்பாட்டு ஆணையத் தலைவர் புருஷோத்தம் பிலிமலே பேசியதாவது:
நிர்வாகத்தில் கன்னட மொழி பயன்படுத்துவதை கட்டாயம் ஆக்க வேண்டும். அப்போது தான் கன்னட மொழியை பாதுகாக்க முடியும். குறிப்பாக, வங்கிகளில் வேலை பார்க்கும் வெளி மாநிலத்தவர், மூன்று மாதத்திற்குள் கன்னடத்தை கற்றுக்கொண்டு பேச வேண்டும். கன்னடம் பேசாதவர்களால், வங்கிக்கு வரும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்தியாவில் பல மொழிகள் மறைந்து வருகின்றன. இந்த நிலைமை, கன்னடத்திற்கு வரக்கூடாது. நிர்வாகத்தில் கன்னட மொழியை பயன்படுத்த, பல உத்தரவுகளை பிறப்பித்து உள்ளோம். இதை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். ௨,௦௦௦ம் ஆண்டு பழமையான மொழியை பாதுகாப்பது நம் பொறுப்பு. பிற மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், கன்னடத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
வெறும் அரசு உத்தரவுகளால் மட்டும் ஒரு மொழியை காப்பாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசு துறையின் இணையதளங்கள் கன்னடத்தில் இருக்க வேண்டும்.
கடைகளில் பெயர் பலகைகளில், 60 சதவீத எழுத்துகள் கன்னடத்தில் இடம்பெற வேண்டும். கன்னட மொழியை மாணவர்களுக்கு கற்று கொடுப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

