வாடிக்கையாளர்களின் ரூ.4 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரி கைது
வாடிக்கையாளர்களின் ரூ.4 கோடியை சுருட்டிய வங்கி அதிகாரி கைது
ADDED : ஜூன் 07, 2025 01:26 AM

கோட்டா, ஜூன் 7-
ராஜஸ்தானில், தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த வைப்புத் தொகையில் இருந்த 4 கோடி ரூபாயை கையாடல் செய்த பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக் கிளையில் மேனேஜராக இருந்தவர் சாக்ஷி குப்தா.
பங்குச்சந்தை முதலீடு
இவர், கடந்த 2020 முதல் 2023 வரை தங்கள் வங்கியில், டிபாசிட் செய்த, 41 வாடிக்கையாளர்களின், 110 வைப்புத்தொகை கணக்குகளில் இருந்த, 4.58 கோடி ரூபாயை முறைகேடாக எடுத்து, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளார்.
இதில் சாக்ஷிக்கு இழப்பு ஏற்பட்டதையடுத்து, வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வாடிக்கையாளர் ஒருவர் தான் செலுத்திய வைப்புத்தொகை விபரங்களை கேட்டறிய வங்கிக்கு வந்தார்.
அப்போது, வங்கி மேனேஜர் சாக்ஷி குப்தா செய்த கையாடல் விபரங்கள், வங்கி நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றன. இதுகுறித்து வங்கி நிர்வாகத்தினர் அளித்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சாக்ஷி குப்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வங்கி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், வங்கி மேனேஜராக இருந்த சாக்ஷி குப்தா, அதிகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் டிபாசிட் செய்த வைப்புத்தொகையை, அவர்களின் மொபைல் எண்ணிற்கு பதிலாக தன் மொபைல் எண்ணை அளித்ததால், வங்கி அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,கள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாமல் தடுத்ததை கண்டறிந்தனர்.
இதையடுத்து, சாக்ஷி குப்தாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வங்கி மேனேஜர் கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், அந்த வங்கி கிளையை முற்றுகையிட்டு தாங்கள் முதலீடு செய்த பணம் பாதுகாப்பாக உள்ளதா என கேட்டு வருகின்றனர்.
பயம் தேவையில்லை
இதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட பதிவில், 'வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு மிகவும் முக்கியம்.
'வங்கியில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.